Saturday, September 25, 2010

நல்ல காலம் வருகுது

பாடல்: பாரதியார். இசை : எம் பி ஸ்ரீநிவாஸன் ஸ்ருதி : 2 1/2


நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு
சொல்லு சொல்லு
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

டிண் டிண் டிண் டிண் .........

தரித்திரம் போகுது செல்வம் வருகுது
படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
பண்ணினால்..... ஆஹா
போவான் போவான் ஐயோ என்று போவான்
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சாத்திரம் வளருது சூத்திரம் தெரியுது
எந்திரம் பெருகுது தந்திரம் வளருது
மந்திரம் எல்லாம் வளருது வளருது
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

சாமிமாருக்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறு சுறுப்பு விளையுது
எட்டு லெட்சுமியும் ஏறி வருகுது
பயம் தொலையுது பாவம் தொலையுது
சாத்திரம் வளருது சாதி குறையுது
நேத்திரம் திறக்குது நியாயம் தெரியுது
நல்ல காலம் வருகுது வருகுது
நல்ல காலம் வருகுது வருகுது

Sunday, September 12, 2010

சுகானுபவம்

ஜூலை மாதம் ஏழாம் தேதி புதன் கிழமையன்று முற்போக்கு எழுத்தாளரும், கலாரசிகருமான கோனேரி ராஜபுரம் திரு ராமச்சந்திர வைத்யநாத் அவர்களின் இரண்டாவது மகளின் திருமண நிகழ்ச்சியில் பீட் குழுவினர் சேர்ந்திசை நிகழ்ச்சி நடைபெற்றது. 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்' என்ற கவிதை வரிகளை முக்கியப்படுத்தி இது நம்ம வீட்டு கல்யாணம் என்று அனைவரும் உணரத்தக்க வகையில் திருமண நிகழ்வு ஒவ்வொன்றையும் முழு அர்த்தமுள்ளதாக இருக்கும்படி திட்டமிட்டு நடத்தியிருந்தார். சேர்ந்திசை நிகழ்ச்சியைப்பற்றி அவரின் கருத்துக்கள்..... இதோ அவரே எழுதுகிறார்.

ஆயிரம் பொய் சொல்ல அனுமதி இருந்தபோதிலும் பொய்யேதுமின்றி திருமணத்தை நிச்சயித்த பின்னர், நிகழ்ச்சிகளை இறுதியாக்கும் நிலையில்தான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுமோ என்ற கருத்து எழுந்தது.

மரபு வழியாகவே இசை ஞானமும் நுட்பமாக விவாதிக்கும் பாங்கும் உடைய எங்கள் அனைவருக்குமே, திருமண வைபவத்தில் மெல்லிசை என்ற பெயரால் செவிப்பறையை அதிரவைக்கும் கோர்வையையும், மேம்போக்கான கருத்துக்கள் அல்லது ஆபாசமான வக்கிர வரிசைகளையும் கேட்க வேண்டுமா என்ற விவாதம் உருவாகியது. தவிர நிகழ்ச்சிப் போக்கில் இடைவெளியை நிரப்பவே திருமணத்தில் இசை என்பதிலிருந்து, பரிபூரணமாகவே இசை வெளியில் சஞ்சரிப்பது மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்ற பொதுவான கருத்து உருவாகியது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது இரு தரப்பினர்க்கும் சோர்வைத் தருமோ என்ற சந்தேகமும் இருந்தது.

திருமணத்தின் ஒரு பகுதியாக 'ப்ரத்யேகமான இசை நிகழ்ச்சி' யை நடத்துவது என்று சற்றே துணிச்சலுடன் முடிவெடுத்த பின்னர் மெல்லிசை அல்லாது எந்த நிகழ்ச்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. குடும்ப நண்பர் என்ற ரீதியில் பி.எஸ்.என்னை அழைக்கலாம், மாமியை ஜலதரங்கம் வாசிக்கச் சொல்லலாம் என்று பல்வேறு கருத்தோட்டங்கள் உருப்பெற்ற நிலையில்தான் சேர்ந்திசை குறித்து அசை போட்டோம்.

அறுபதுகளில் வானொலியில் ஞாயிறுதோறும் காலை சேர்ந்திசை கேட்பது, அத்தோடு இணைந்து இருப்பது என்பது ஒரு ரசமான அனுபவமே. சதீஷ் பாட்டியா, எம்.பி.எஸ், கனு கோஷ், டி.எல்.ராய், வினய் சந்திர மெளத்கல்யா போன்ற இசையமைப்பாளர்களும் இக்பால், பாஸ்கரன், தாசரதி, ப்ரேம் தவான், சானி குருஜி, நீனு மஜூம்தார் போன்ற இசையப்பாளர்களும் அன்றைய தினம் ஆராதனைக்குரியவர்களாய் இருந்தனர். 'ஜய ஜன் பாரத் ஜன் மன் அபிமத் ஜன் கண் தந்திர விதாதா', 'சாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ஹம் புல்புலேன் ஹைன் இஸ்கி யே குல்ஸிதான் ஹமாரா', பில்லல்லாரா பாபலல்லாரா ரேபடி பாரத பெளரல்லாரா', ஜன்மகாரினி பாரதம் கர்ம மேதினி பாரதம்', ஆகாச கங்கா சூர்ய சந்திர தாரா சந்தியா உஷா கொய்னா நதி' போன்ற பாடல் வரிகள் இன்னும் மனசில் திப்பி திப்பியாய் இருக்கின்றதென்றால் அதன் வடிவம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

ஒரு மாறுபட்ட இசை வடிவமாக இருக்கும் சேர்ந்திசை என்ற அடிப்படையில் திருமண நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றது. ஏற்கனவே சுதந்திர தினப் பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பீட் குழுவினரின் நிகழ்ச்சியை திறந்த வெளியில் நடத்திய அனுபவத்தின் காரணமாக அவர்களையே அழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாலை என்று சொல்வது தவறுதான். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் நிகழ்ச்சி துவங்கியது. அங்கும் இங்கும் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். நலங்கு முடிந்து உற்றார் உறவினரும் நண்பர்களும் சோர்வு நிலையில் இரவு உணவிற்கு சற்று நேரமாகும் என்ற காரணத்தினால் நாற்காலியில் சற்றே கண் மூடி களைப்பாறிக் கொண்டிருந்தனர். நெருக்குதல் ஏதும் இல்லாத காரணத்தினால் பணியாளர்களும் சற்றே ஓய்வில், அணா பைசா கணக்கு பார்த்துக்கொண்டு நாங்களும் திசைப் பூண்டை மிதித்த நிலையில்.

ஆனந்த் மேடையில் வரிசையாய் நின்ற குழுவினருக்கு பூச்செண்டை அளித்ததும், குணா மைக்கில் அறிவித்ததும், ரவிசங்கரின் அறிமுக உரையும் வழக்கமானதொன்றாகவே கருதினோம்.

தபேலா, கீ போர்ட் துணையுடன் குரல்கள் சேர்ந்திசைக்கத் தொடங்கியவுடன் அனைவருமே விழிப்புற்றோம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

பாடிய பாடல் வரிசையை நினைவில் கொள்ளவில்லை என்றாலும் பல்வேறு பாடல் வரிகள் இன்னும் பிரமிப்பை அளிக்கிறது. பாரத சமுதாயம் வாழ்கவே, பாடும் பறவைகளே போன்ற பாடல்கள் இன்னும் ரீங்காரம் செய்கிறது என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல என்பதை நிகழ்வினைக் கேட்டவர்கள் உணர்வர்.

அரங்கில் கூடியிருந்த சொற்பமான எண்ணிக்கையில் இருந்தவர்கள் இசைப் பற்றிய ஞானம் உடையவர்கள் மற்றுமின்றி மற்றவர்களுமே இந்த இசை அருவியை பேரானந்தமாக உணர்ந்தனர். மூழ்கினர். பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருந்த பணியாளர் சரோஜா அப்படியே அதைப் போட்டுவிட்டு அரங்கை நோக்கி தன் பார்வையை திருப்பியது சாதாரணமான விஷயமல்ல. 'வேற மாதிரி இருக்கு, காதை அமுக்கலை, சந்தோஷத்தை உற்சாகத்தை அளிக்கிறது' என்று அவர் சொன்னது மட்டுமல்ல அனைவரின் கருத்தோட்டமாகவே இருந்தது.

இந்த இசை வடிவம் காலம் காலமாகவே இருந்து வந்த போதிலும், புழக்கத்தில் இல்லாததினால் மக்களுக்கு புதியதாகவே இருக்கிறது. அரங்கில் இருந்த சம்பிரதாயமான இசை வடிவங்களை அறிந்து கேட்டு வரக்கூடியவர்கள் இந்த நிகழ்ச்சியை உற்று நோக்கினர்.அவர்களை இது பரவசப்படுத்தியது என்று சொல்வதைக் காட்டிலும் வெகுவாக பாதித்தது என்றே கூறலாம். வாரப் பத்திரிக்கையொன்றில் வெளியானது பற்றிய அறிவிப்பின் பேரில் சேர்ந்திசைத்த கவிதை வரிகளுக்கு இசை வடிவம் அளித்தது பற்றி பலரும் பிரமித்தனர். வெகுவாக பிரஸ்தாபித்தனர்.

இரண்டு மூன்று நாட்கள் ராக் கண் விழித்து முறையான உணவின்றி சோர்வுற்று மெற்கொண்ட பணி நிறைவாக முடியும் வகையில் இந்த சேர்ந்திசை நிகழ்ச்சி அமைந்தது எங்கள் அனைவருக்குமே புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது.

இருப்பினும் பலரின் கருத்தோட்டத்தின் அடிப்படையில் ஒரு சில அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், அருணகிரி நாதர் போன்றோரின் அழகும் செறிவும் மிக்க பாடல் வரிகளை தேவைக்கேற்ப கையாள முடியும்.

நாம சங்கீர்த்தனம் போன்று பார்வைகளையும்ப்ங்கேற்க வைக்கும் வகையில் எளிய பாடலொன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உடை விஷயத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படும் வகையில் யோசனை செய்யலாம். அது பார்வையாளர்களை ஈர்ப்புடையதாக்கும்.