Saturday, January 8, 2011

சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் ...... [ 1 ]

‍_ விஜய திருவேங்கடம் (அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர்)
_ நன்றி 'அமுத சுரபி' ஜனவரி 2011

1965 இல் வெளிவந்து உலகமெங்கும் திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் ஆஸ்கார் போன்ற விருதுகளையும் குவித்த 'சவுண்ட் ஆஃப் மியூசிக்' ஆங்கிலத் திரைப்படம் நினைவிருக்கலாம். இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் திரை வடிவம்; உணர்ச்சிக் காவியம். நடந்ததற்கும் நடந்ததாகச் சொல்லப்பட்ட திரைக் கதைக்கும் வெகு தூரம் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன. அது வேறு கதை. ஆனால் அந்த திரைப்படமும், உண்மைச் சம்பவமும் உலகத்தார் முன் வைத்த 'சேர்ந்து பாடுதல்' எனும் கலை வடிவம் பின்னாளில் ஓர் உலக சமூக இயக்கமானது குறித்தும், அந்த மாபெரும் இயக்கத்தின் இந்திய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததோடன்றி அதில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய எம் பி சீனிவாசன் எனும் சேர்ந்திசை சித்தர் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் இரண்டு போர்களில் சிக்கித் திணறியது. ஹிட்லரின் நாடு பிடிக்கும் பேராசையும், யூதரினத்தை பூண்டோடு அழித்து ஒழிக்கவேண்டும் என்ற கொடூர எண்ணமும் சேர்ந்து இரண்டாம் உலகப் போர் மூளக் காரணமாயின. ஜெர்மனிக்குள்ளும் தன் ஆக்கிரமித்த நாடுகளிலும் ஹிட்லர் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம் ஹிட்லரின் ஆக்கிரமிப்பு வளையத்தில் ஆஸ்திரியாவும் அகப்பட்டுக்கொண்டது.

அங்கே ஆஸ்திரிய கப்பறபடைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற வான் ட்ராப் பத்துக் குழந்தைகளை பெற்றுத் தந்த தன் அன்பு மனைவியை இழந்து வாடியவர். தன் குழ்ந்தைகளுக்கு தாதியாகவும் இசை ஆசிரியையாகவும் மரியா என்ற கன்யா ஸ்திரீயை அமர்த்துகிறார்.

குழந்தைகளோ குறும்புத் திலகங்கள்! முன்னர் இருந்த ஆசிரியைகளை சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்த செல்வங்கள்! ஆனால் மரியா குழந்தைகளின் அன்பை சம்பாதித்தோடன்றி அவர்களை அடக்கத் திலகங்களாக மாற்றி அனைவரும் சேர்ந்து பாடும் சிங்காரச் செல்வங்களாகவும் செய்துவிடுகிறார். கறார், கண்டிப்புக்குப் பெயர் பெற்ற வான்ட்ராப் நன்கு பாடவும் தெரிந்தவர். பாட்டு வாத்தியாரிடம் மனத்தைப் பறிகொடுக்கிறார்.

கன்யாஸ்திரீக்குக் கல்யாணமா? தான் காதலிக்காவிட்டாலும் குழந்தைகளின் பாசத்தினால் குழம்பித் தவித்து, குருகுலத் தலைவியை ஆலோசனை கேட்கிறார் மரியா. 'அதுவே தேவனின் திருவுள்ளம் போலும்' என்று சம்மதம் தந்துவிடுகிறார் தலைவி.

வான்ட்ராப் குடும்பம் இப்போது குதூகலக் குடும்பமாகிறது. சேர்ந்திசைக் குழுவாகிறது. குழுவிற்கு ஆஸ்திரியா முழுவதும் வரவேற்பு. வெளி நாடுகளிலிருந்தெல்லாம் அழைப்புகள்.

வான்ட்ராப் ஜெர்மனிய ஆக்கிரமிப்பையும் நாஜிக் கொள்கைகளையும் அறவே வெறுக்கிறார்.

வான்ட்ராப் குடும்பத்தின் தனித்திற்மையை கேள்விப்பட்ட நாஜிக்கள் தங்களது குரூர எண்ணத்திற்கு அந்தக் குடும்பத்தைப் பயன்படுத்த எண்ணுகின்றனர். வான்ட்ராப் இசைந்திருந்தால் வான் பொருட் செல்வம் குவிந்திருக்கும். இசைய மறுத்து நாட்டைவிட்டே வெளியேறுகின்றனர் வான்ட்ராப் குடும்பத்தினர். ஒரு தேவாலய அரங்கில் பாடி முடிக்கையில் திரை விழவும் கிடைத்த இடைவெளியில் கன்யா குருகுலத்தினர் உதவியோடு மேடையின் பின் வழியே தப்பி ஓடி அழகிய ஆல்ப்ஸ் மலையின் மீதிருந்த வண்ணம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாகவும் அதை சேர்ந்து பாடி கொண்டாடியதாகவும் திரைப்படம் முடியும்.

வான்ட்ராப் குடும்பம் நாஜிக்களை எதிர்த்து நின்றதால் அவர்களே கண்ட சேர்ந்திசை ஒரு சமூக இயக்கமாக முடியும் என்பதை சோவியத் யூனியன் இனம் கண்டு போற்றியது. அதே போல் இடதுசாரி பரிசோதனையில் முக்குளித்தெழுந்த கிழக்கு ஐரோப்பா முழுவதும் அதை பின்பற்றியது.

இந்தியாவின் சேர்ந்திசை இயக்கம் கொஞசம் தாமதமாகவே தோன்றியது. ஆனால் அதன் ஆரம்பம் எம் பி எஸ் எனும் அற்புத மனிதரின் வழி காட்டலில் விமரிசையாகவே அமைந்தது.

...................... [ சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் { 2} .. காண்க]