இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்….
– எஸ் வி வேணுகோபாலன்
மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.
மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவின் பொறுப்பாளர், திரு டி ராமச்சந்திரன் அவர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் நெகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். அர்ப்பணிப்பு மிக்க முறையில் இசைப்பயணம் தொடரும் அவரைப் போன்றோரது உள்ளன்பு வணக்கத்திற்குரியது.
அண்மையில், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில், இசைக்கவி ரமணன் அவர்களுக்கு விருது வழங்கிய மேடையில், டி ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்த்தியுள்ள உரை உள்ளிட்டு யூ டியூப் இணைப்பை, தோழர் முகமது இக்பால் அனுப்பி இருக்கிறார்.
பாரதி கவிதை வரிகளின் பொருள், ஆவேச உணர்ச்சி, பாவம் இவற்றை அப்படியே பாடலில் கொண்டுவர வேண்டும் என்று எம் பி எஸ் மேற்கொண்ட பாடுகள் பற்றிய குறிப்புகள் தெறித்த உரை அது. அதில் ஓரிடம் மிகவும் கவர்ந்தது.
‘ஓடி விளையாடு பாப்பா பாடலை இரண்டு மூன்று சரணங்களோடு பாடி முடித்துக் கொள்கின்றனர், ஆனால், அந்தப் பாடலின் உயிர் நாடி, பாதகம் செய்பவரைக் கண்டால் என்ற சரணம் தான்…என்று குறிப்பிடுவாராம் எம் பி எஸ். ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா’ என்ற வரியை அதற்கே உரிய அழுத்தம் திருத்தமாகப் பாடிவிட்டு, ‘மோதி மிதித்து விடு பாப்பா’ என்பதை மூன்று முறை மேலும் வலுவாக உரத்துப்பாட வேண்டும், பின்னர், ‘அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று முடிக்க வேண்டும் என்பார். அப்படி பாட முடியவில்லை எனில், அந்தப் பாடலையே எடுக்க வேண்டாம் என்றே சொல்வாராம். பாடலைப் பாடும் அரங்கில் யாரேனும் பாதகம் செய்பவர் அமர்ந்திருந்தால், அவர் கைக்குட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்ளும் படி இருக்க வேண்டும் நாம் அதை இசைப்பது என்பாராம் எம் பி எஸ்.
சட்டம் இயற்றும் இடங்களில், அதிகார பீடங்களில், அடக்குமுறை தர்பார்களில், சாதாரண மக்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடும் செல்வாக்கு மிகுந்த அராஜக வாதிகள் சபைகளில், இன்னும் இம்மாதிரியான மன்றங்களில் இந்தப் பாடலை உடனே எண்ணற்றோர் சூழ்ந்து நின்று சேர்ந்திசையாக ஒலிக்கவேண்டும் என்று தோன்றியது. உடனே, அதைத்தானே, பஞ்சாப் விவசாயிகள் இப்போது தலைநகரில் முற்றுகையிட்டு செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பட்டது.
‘பகத் சிங் வாரிசுகள் தான் தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர்‘ என்று நிறைய வாட்ஸ் அப் செய்திகள் பார்க்கிறோம். எம் பி சீனிவாசன் இசையில், எப்போது நினைத்தாலும் உலுக்கி எடுக்கும் அந்தப் பாடலைத்தான் இணையத்தில் தேடிக்கிடைக்கவில்லை என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். அறிமுகம் கிடைத்ததும், சேர்ந்திசைக் குழுவினரிடம் கேட்கையில், தொகுப்பில் இருந்து எடுத்து அனுப்பி வைக்கிறோம் என்றும், எம் பி எஸ் பாடல்களுக்கு எல்லாம் காப்புரிமை கிடையாது, அவை சமூகத்தின் சொத்து என்றும் செய்தி அனுப்பி இருக்கிறார் திரு டி ராமச்சந்திரன்.
பாரதி விழாவில் அவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து அந்தப் பாடலும், ஒளி படைத்த கண்ணினாய் பாடலும் சேர்ந்திசை குழுவினர் இசைப்பதை அந்த நிகழ்வில் ஒளிபரப்பி இருப்பதைப் பார்க்க முடிந்தது.
சில ஆண்டுகளுக்குமுன்பு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களிடம் இந்த எழுச்சிகரமான பாடலை எப்போது எழுதினீர்கள் என்று கேட்டது நினைவில் இருக்கிறது. எம் பி எஸ், திடீர் என்று பகத் சிங் பற்றி பாடல் வேண்டும் என்று எங்கள் நட்பின் காரணமாக நேரே வீட்டுக்கே வந்துவிட்டார், அவர் விரும்பிய விதத்தில், அவருக்கேற்ற மெட்டுக்கு, நாற்பது நிமிடங்களில் தயார் செய்த இசைப்பாடல் அது என்று சொல்லி அசர வைத்தார்.
வைகறை கோவிந்தன்
‘வானம் மூடிய காரிருள் மெல்ல அதிர்ந்தது, ஒரு காலடி ஓசை எந்தன் காதில் விழுந்தது….யாரிவர்…என் நேரினில் …பார்வைத் தேரினில்…இருள் வேளையில்… .’ உடனே, கோரஸ் குரலில், உரத்து, ‘யாரிவர்?’ ஒரு சின்ன இடைவெளி. பின் ஒட்டுமொத்தக் குரலில், ‘கோடி எரிமலை, ஆடும் அலைகடல், ஈடு இணையிலாத எங்கள் பகத் சிங், எங்கள் பகத் சிங்……ஹா….ஹா…ஹா…..ஹா….. ‘
சிலிர்க்க வைக்கும் அந்த இசைப்பாடலின் கடைசி சரணத்தை, ஆயிரம் முறைக்குக் குறையாது யாரிடமாவது பித்துப் பிடித்தது போல் சொல்லியும் வேட்கை அடங்கவில்லை….
‘கனவுக் கொடியில் கொய்ததல்ல சுதந்திரம் – பல
தியாகம் செய்து பறித்து வந்த மலரிது – ஒரு
தானமாகக் கிடைத்ததல்ல சுதந்திரம் – உயர்
மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசிது‘
எம் பி எஸ் அவர்களது இசையில் இந்தப் பாடலுக்கும், ஒளி படைத்த கண்ணினாய் என்ற பாரதி பாடலுக்கும் டி. ராமச்சந்திரன் அறிமுகம் செய்வதும் சேர்த்து அந்தக் காணொளியில் நீங்கள் காண முடியும்.
தொண்ணூறுகளில், புதிய தாராளமயக் கொள்கைக்கு எதிரான பிரச்சார மேடைகளில், கலையார்வம் கொண்ட வங்கி ஊழியர்கள் இணைந்து நாடகங்கள் போடத் தொடங்கினர். அருமையான கவிஞர்கள் களத்தில் உருவாக்கினர். நம்மூர் வேப்பிலை, மஞ்சள் எல்லாவற்றுக்கும் அமெரிக்கா காப்புரிமை கோரும் என்கிற அபாயம் சூழ்ந்த காட் உடன்பாடு குறித்து காட்டமான முறையில் அம்பலப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி தோழர் சிபி ரவிசங்கர் எழுதி இசையமைத்த நினைவில் அதிலிருந்து சில வரிகள்:
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அவ்வைப் பாட்டி சொன்ன மொழி
அதுக்கும் கூட வரி தரணும்னு
அமெரிக்காக்காரன் சொல்றாங்க
இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லேன்னு
அம்மாஞ்சி தாத்தா சொல்வாங்க
அதுக்கும் கூட வரி தரணும்னு
அமெரிக்காக்காரன் சொல்றாங்க
வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) தமிழகத்தில், குறிப்பிடத்தக்க சேர்ந்திசைக் குழுவாக மலர்ந்தது, எம் பி சீனிவாசன் அவர்களது மாணவி, ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்களது பயிற்சியில், பல்வேறு வங்கிகளில் பணியாற்றும் பாடகர், பாடகியர், இசைக் கலைஞர்கள் ஒரு மாலையாகத் தொடுத்து வழங்கியதைப் போன்ற குழு அது. எம் பி எஸ் அவர்களது இசையமைப்பில் விளைந்த தீஞ்சுவைக் கனியமுதம் பலவும் பீட் குழுவினரின் இசையிலும் பொழிந்தது. கே சி எஸ் அருணாச்சலம் அவர்களது ‘பாடும் பறவைகளே, பறந்தென் தோளில் அமர்ந்திடுங்கள்‘ தொடங்கி சிறப்பான இசையை, எத்தனையோ மேடைகளில் வழங்கியது மறக்க முடியாதது. பீட் இசைக்குழுவின் அமைப்பாளராகவும் சி பி ரவிசங்கர் ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது.
அக்டோபர் 5, 1997 தேதி அதில் மகத்தானது. அது இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு. 50 குழந்தைகள் பாரதி பாடல்கள் இசைத்தனர். அதுவும், மகாகவியாகவே உடையணிந்து முண்டாசு கட்டி ! அதுவும், அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்திலேயே! அதுவும், பாரதி பாடல்கள் என்றாலே நினைவில் நிற்கும் அற்புத இசைவாணி டி கே பட்டம்மாள் ஆனந்தத்தோடு பார்க்க! அதுவும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் பரவசத்தோடு பாராட்ட!
சிறார்களை உற்சாகத்தோடு தட்டிக்கொடுத்து பிசிறு இல்லாது, சுருதி விலகாது, தாளம் தப்பாது கொண்டாட்டமாகப் பாடுவதற்கான தொடர் பயிற்சி அளித்து அன்றைய நிகழ்வைச் சிறப்பாக நடத்தியவர், அப்போது இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்த தோழர் வசந்தவல்லி.
அண்மைக் காலத்தில் பண்பாட்டுக் களத்தில் செயலாற்றி வந்த சில அருமையான மனிதர்களை இழந்து விட்டது சமூகம். சிறப்பான பாட்டுக்காரன் வைகறை கோவிந்தன், சாரட்டு வண்டி நினைவுகளாகி உறைந்து விட்டார் நெஞ்சில்.
கருப்பு கருணா
இயலிசை நாடகக் கலைஞர்களை, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்வுக்காகச் செல்லும் நேரத்தில், மேடையில் அறிமுகம் செய்விக்கும் போதும் சரி, ஊர் ஊராக அவர்கள் குரலைப் பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்போதும் சரி, அஞ்சாது கருத்துரிமைக்கான குரல் எடுத்து, ஒடுக்குமுறைக்கு எதிராகத் தோள்கள் தட்டும்போதும் சரி, எண்ணற்றோர் உள்ளத்தில் இடம் பெற்றவரான கருப்பு கருணாவும் இனி நினைவில் வாழ்பவரானது பெருஞ்சோகம்.
நாட்டுப்புற வழக்காற்றியல் ஆய்வாளர் தொ பரமசிவன் எனும் மகத்தான பண்பாக்கங்கள் கொண்ட பேராசிரியரையும் பறிகொடுத்துவிட்டோம்.
கருப்பு கருணா அவர்களது உடலை அவர் முன்னதாக தெரிவித்திருந்த விருப்பப்படி, மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்குகையில், திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடியதைப் பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். குழுமி இருந்தோர் உள்ளத்தை உருக்கி விட்ட அந்த இசை, அங்கே இருந்தோர் எல்லோரையும் உடைந்து அழும் வண்ணம் நெகிழ வைத்துவிட்டது என்றார்.
தொ பரமசிவன்
மகாகவியின் ‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ‘ என்பது தான் கிருஷ்ணசாமி அங்கே இசைத்த பாடல். கேள்விப்பட்டதும் அழைத்து அன்போடு கேட்டுக் கொண்டதும் ,அலைபேசியில் அந்தப் பாடலைப் பாடி அந்த இரவு நேரத்தை நனைத்தார் கரிசல் குயில். அடடா…அடடா….. எப்பேற்பட்ட இசைக் கலைஞர் என்று மீண்டும் நனைந்தன கண்கள்.
இதுவரை கேட்டதிலிருந்து வேறு தினுசான மெட்டில் அமைந்திருந்தது. ‘மழையின் தாளம் கேட்குது…’ நினைவுக்கு வருதா, சம்போ பாடல் நினைவுக்கு வருதா‘ என்று கேட்டார் குயில். பின்னர் அவரே புதிர் அவிழ்த்து, ரேவதி ராகத்தில் அமைத்த மெட்டு என்றார். இசைக்கவி ரமணன் முன் ஒருமுறை பாடுகையில், எத்தனையோ மெட்டுக்களில் கேட்டதுண்டு, ஆனால், இந்த ராகத்தில் அமைந்தது, இந்தப் பாடலுக்கு உன்னதமான இசை என்று நெகிழ்ந்து போனாராம் அவர். ஒவ்வொரு மெட்டும், பாரதியின் கவிதை வரிகளின் மேன்மையை இன்னுமின்னும் அருகே நெருங்க அழைக்கிறது.
கள்வனின் காதலி படத்திற்காக, கோவிந்தராஜூலு, கண்டசாலா இசையமைப்பில், பன்முக ஆளுமையான பி பானுமதி, ‘நல்லதோர் வீணை செய்தே‘ பாடியதைக் கேட்கையில் உள்ளத்தை என்னவோ செய்கிறது. ஆஹா….ஆஹா..
அவரது இசை ஞானம் பாடலின் முக்கிய பகுதிகளில் பயணம் செய்யும் குரலில், அருவியை மிகவும் அருகே சென்று பார்க்கையில், பெருக்கெடுத்து மேலிருந்து விழும் நீரின் வேகம் ஒருபுறம் இருக்க, பாறைகளின் இடுக்குகள் வழியே உள்ளே நுழைந்து தனக்கான பாதையை நெளிந்து செல்லும் நாகத்தைப் போலவே அமைத்துக் கொண்டு இறங்கி வரும் நீர், கற்களை மாசு துடைத்துப் பளிங்காக ஆக்குவதோடு அவற்றை மென்மையாக இளக்கிக் கொடுத்தபடியே தரைக்கு வந்தடைவதைப் போலவே மனங்களில் புகுந்து வெளியேறுகிறது.
‘விசையுறு பந்தினைப் போல்’ உள்பட எல்லாச் சரணங்களும் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. ‘நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கவி வாக்கியத்தை எப்படியப்பா எழுதினாய், எங்கள் பாரதி!
இசை, துயரங்களைக் கடத்துகிறது, கடக்கவும் உதவுகிறது. மகிழ்விக்கிறது. நெகிழ்விக்கிறது. தோழர் ரகுபதி (கனரா வங்கி) மிகப் பழைய பாடல் ஒன்றை அனுப்பிக் கேளுங்கள் என்றார்.
பாதசாரி என்ற தெலுங்குப்படம், தமிழில் கானல் நீர் என்ற பெயரில் 1961ல் வந்திருக்கிறது. சமுத்ரால ராகவாசார்யா எழுதிய பாடலை, கண்ணதாசன் அழகான தமிழில் கொண்டு வந்த ‘கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு‘ பாடல், மாஸ்டர் வேணு இசையில் ஜிக்கியும் பானுமதியும் பாடியது என்று வலைப்பூ ஒன்றிலும் குறிப்புகள் இருக்கின்றன.
உண்மையில், பி பானுமதி அவர்களுக்கு மிகச் சிறந்த நடிப்பிற்காக ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுத் தந்த இந்தப் படம், அவருடைய கணவர் இராமகிருஷ்ணா அவர்கள், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் எடுத்தது.
தி இந்து ஆங்கில நாளேட்டில், அந்தக் காலத்திய திரைப்படங்கள் குறித்த தமது நுட்பமான தொடரில், எழுத்தாளர் ராண்டார் கை சிறப்பாக எழுதி இருக்கும் கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும் ( https://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaanal-neer-1961/article4727300.ece )
சரத் சந்திர சாட்டர்ஜி எனும் மகத்தான வங்க எழுத்தாளருக்கு, மிகவும் தொடக்க காலத்தில் பெரும்புகழ் பெற்றுத் தந்த அவரது ‘படீ தீதி‘ (அக்கா) எனும் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இளம் வயதில் விதவை ஆகிவிட்ட பெண்ணுக்கு ஏற்படும் காதல் உணர்வைக் குறித்த படம், அப்போதைய திரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால், சரியாக எடுபடாமல் தோல்வி அடைந்தது என்கிறார் ராண்டார் கை. படத்தின் இசை, பி பானுமதி என்கிறது அவரது கட்டுரை. ஆனால், மாஸ்டர் வேணு எனும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் பெயர்தான் இணையத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதைக்கருவை அசாத்தியமாக எப்படி இத்தனை எளிய வடிவில் பாடலாகப் புனைந்தார் கண்ணதாசன் என்ற வியப்பு அடக்க மாட்டாதது.
‘அழகைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் அழிவையும் ஏன் படைத்தான்/ ஒலியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் ஊமையை ஏன் படைத்தான்? விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்..’ என்று போகிறது பாடல். ஜிக்கியின் குரலில் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு, பி பானுமதியிடமிருந்து, ‘அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும் யாருக்கும் புரியவில்லை!ஆயிரம் வேதம் சாஸ்திரம் இருந்தும் கேள்விக்கு பதிலில்லை‘ என்று பிறக்கும் பதில், ‘வாழ்க்கை எல்லாம் வெறும் கேள்வி மயம், இதில் வளர்ந்தது சமுதாயம், வந்ததன் பின்னே கேள்வியிலே வாழ்வது தான் நியாயம்!’ என்ற இடத்தில் போய் நிலைகொண்டு விடுகிறது.
தேவிகாவின் துயரம் தோய்ந்த சமாதான பாவங்களும், பானுமதியின் துணிவும் ஏக்கமும் ஒரு சேர வெளிப்படும் முகமொழியும் பாடலின் கனத்தைக் கூட்டுகின்றன. ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே, இங்கு, வேரில் பழுத்த பலா‘ என்றாரே பாவேந்தர், வேறென்ன சொல்ல!
மகத்தான படைப்பாளிகள் கதையை, கவிதையை, கலையை செதுக்குகின்றனர். கருப்பொருளை வாழ்க்கையிலிருந்தே எடுக்கின்றனர். சமூகத்திற்கே படைக்கின்றனர். உள்ளத்தைத் தைக்கிறது, நடுங்க வைக்கிறது, சிலிர்ப்புறச் செய்கிறது என்றெல்லாம் பின்னர் வாசகரும், ரசிகரும் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுகின்றனர். இதில் இசை கலக்கும்போது, விவரிப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுக்குள் தங்களைத் தாங்களே தொலைத்துவிடுவதும், தேடுவதும், கண்டடைந்து திணறுவதுமாக வேறு தளத்தில் நிகழ்கிறது வேதியியல்.
(இசைத்தட்டு சுழலும் ….)