Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts
Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts

Saturday, September 5, 2009

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வணக்கம்

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன்.


இசையை கற்றுத் தருவதில், அதிலும் எந்த பிரிவினருக்கும், குழந்தைகள், பெரியவர்கள், இசையைப் பற்றியே சிறிதும் தெரியாதவர்கள், இப்படி யாருக்கு வேண்டுமானாலும் அவரவர்களுக்கு ஏற்றவகையில் ஆர்வத்துடன், கற்பவர்களும் உற்சாகமடைந்து இசையில் ஈடுபாடு கொள்ளுமளவிற்கு திறம்பட கற்றுத்தருவதில் தேர்ந்தவர் எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன் அவர்கள். ஆசிரியர் தினத்தன்று வலைப்பக்கத்தில் அவரைப் பற்றி எழுதுவது எங்களின் கடமை, மகிழ்ச்சியானது மற்றும் சிறப்பானதும் கூட.

ராஜராஜேஸ்வரி அவர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக திருமதி சீதாமணி ஸ்ரீனிவாஸன் அவர்களிடம் மூன்று வருடம் பயின்றது உட்பட‍ பல் வேறு குருக்களிடம் கர்னாடக சங்கீதம் பயின்றவர்.

புகழ் பெற்ற இசை மேதை திரு எம். பி ஸ்ரீனிவாசன் அவர்களின் சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழவில் துவங்கிய காலம் தொட்டே உறுப்பினராக இருந்து சேர்ந்திசை பயின்றவர். தற்போது அந்தக் குழுவின் இசை ஆதார நபராக இருக்கின்றார்.

சென்னை பல்கலை கழகத்தில் இசையில் பட்டம் பெற்றவர். மெட்றாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ம்யூஸிக்கில் வெஸ்டர்ன் ம்யூஸிக் பயில்கின்றார்.

வழுவூர் சாம்ராஜ் அவர்களின் குழுவின் நடன நிகழ்ச்சிகளுக்கு பாடல்களை பாடியுள்ளார். 1993‍ல் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் பாடியுள்ளார். 1999ல் சிங்கப்பூரில் உள்ள ப்யூபிள்ஸ் தியேட்டரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று ஆர்கெஸ்ட்ரா மற்றும் சேர்ந்திசைக் குழுவினரைப் பயிற்றுவித்துள்ளார்.

தேசிய நாடகப் பள்ளியின் ராமானுஜர் நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார். அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை குழுவிற்கு மேற்கத்திய இசைப் பயிற்சி அளித்துள்ளார்.

1995ல் ஆயனாவிற்காக கர்நாடக இசை அமைத்துள்ளார்.

2001ல் பிரளயனின் சென்னைக் கலைக் குழுவின் உப கதை நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார்.

75 பாடகர்கள் மற்றும் 10 இசைக் கருவிகளையும் கொண்ட குழுவிற்கு சில அற்புதமான பழைய கீதங்களையும் ஸ்வரஜதிகளையும் கற்றுத்தந்து அரங்கேற்றியுள்ளார்.

இத்தனை திறமை படைத்த ஆசிரியை எங்களின் பயிற்சியாளராகவும், இசை நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்து குழுவின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் ஆதார ஸ்ருதியாக இருக்கின்றார். ஆசிரியர் தினமான இன்று அவருக்கு எங்களின் வணக்கங்களை உரித்தாக்குகின்றோம்.