Tuesday, September 8, 2009

புதிய பாடல்கள் புதிய இசை அமைப்பு

பீட் சேர்ந்திசைக் குழு தற்போது புதிய பாடல்கள் பலவற்றை கற்று வருகிறது.

மலேசிய நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தவுடனே புதிய பாடல்களைச் சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய பாடல்கள் புதிய செய்திகளை சொல்பனவாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பழைய பல்லவி, அனு பல்லவி, சரணம் என்கிற அமைப்பு புதிய செய்திகளைச் சொல்ல ஏதுவாக இல்லை. புதிய செய்திகள் அனைத்தும் புதுக் கவிதைகள் பாணியில்தான் உள்ளன.

பாரதியைப்பற்றி பாரதி தாசன் பாடியுள்ள தமிழகம் தமிழுக்குத்தகும் என்ற கவிதை பழைய பாணி பாடல் கிடையாது. அந்த பாடலுக்கு இசையமைத்துள்ள திரு எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்கள் இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு நடை அடுத்து வரக்கூடிய ஓரிரு வரிகளுக்கு ஒரு நடை என்று பாடல் முழுவதற்கும் பல் வேறு நடைகளில் இசையமைத்து புதுமை புரிந்திருந்தார். அந்த வழிகாட்டலில் ஒரு சில புதுக்கவிதைகளை தேர்ந்து எடுத்து ஏற்கனவே இசையமைத்திருந்தார் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்.

ஆனால இவை பாரதிதாசனின் கவிதைகளைப்போல் நீண்ட கவிதைகள் அல்ல. ஆனந்த விகடனில் வெளிவந்து பரிசு பெற்ற சிறு சிறு புதுக் கவிதைகள்.

இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இசையமைத்து குழுவிற்கு பயிற்சி கூட துவங்கினார். திருக்குறளுக்குடக் கூட இசையமைத்து பயிற்சி தந்தார். திருக்குறள் மட்டும் பாண்டிச்சேரியில் நடைப்பெற்ற வங்கி ஊழியர் (பெஃபி டி என்) மாநாட்டில் அரங்கேற்றினோம். ஆனால் புதுக்கவிதைகள் பயிற்சி மட்டும் தொடரப்படாமல் இருந்த்து. தற்ப்போது அது துவங்கப்பட்டு மூன்று புதுக்கவிதைகள் மற்றும் பாரதியின் காக்கைச் சிறகினிலேயும் சென்ற சுதந்திர தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகி பி ராமமூர்த்தி இல்லத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் அரங்கேற்றப்பட்டு சேர்ந்திசை முன்னோடி ஆசான் எம்.பி.ஸ்ரீனிவாசனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன.

தற்போது புதியதாக‌ திருமதி ராஜரஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் தயாராகியுள்ள பாடல்கள்:‍

1. அந்த புறாக்கள் அஃறிணை = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
2. ப்ராகாரம் நுழைந்தவுடன் = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
3. நாரை நடக்கும் குளத்திலே = விகடன் புதுக் கவிதை = சின்ன சின்ன ஆசைகள்
4. காக்கைச் சிறகினிலே = பாரதியார்
5. ஜெய ஜெய பாரத = பாரதியார்
6. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், குழலினிது யாழினிது, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ஒழுக்கம் விழுப்பம் தரலான், கற்க கசடற, துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ஆகிய திருக்குறள்கள்.

மேலும் இந்த பட்டியல் நீளும். பாடல்கள் அனைத்தும் இசை குறிப்புகளோடு இப்பக்கங்களில் வரும்.

Saturday, September 5, 2009

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வணக்கம்

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன்.


இசையை கற்றுத் தருவதில், அதிலும் எந்த பிரிவினருக்கும், குழந்தைகள், பெரியவர்கள், இசையைப் பற்றியே சிறிதும் தெரியாதவர்கள், இப்படி யாருக்கு வேண்டுமானாலும் அவரவர்களுக்கு ஏற்றவகையில் ஆர்வத்துடன், கற்பவர்களும் உற்சாகமடைந்து இசையில் ஈடுபாடு கொள்ளுமளவிற்கு திறம்பட கற்றுத்தருவதில் தேர்ந்தவர் எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன் அவர்கள். ஆசிரியர் தினத்தன்று வலைப்பக்கத்தில் அவரைப் பற்றி எழுதுவது எங்களின் கடமை, மகிழ்ச்சியானது மற்றும் சிறப்பானதும் கூட.

ராஜராஜேஸ்வரி அவர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக திருமதி சீதாமணி ஸ்ரீனிவாஸன் அவர்களிடம் மூன்று வருடம் பயின்றது உட்பட‍ பல் வேறு குருக்களிடம் கர்னாடக சங்கீதம் பயின்றவர்.

புகழ் பெற்ற இசை மேதை திரு எம். பி ஸ்ரீனிவாசன் அவர்களின் சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழவில் துவங்கிய காலம் தொட்டே உறுப்பினராக இருந்து சேர்ந்திசை பயின்றவர். தற்போது அந்தக் குழுவின் இசை ஆதார நபராக இருக்கின்றார்.

சென்னை பல்கலை கழகத்தில் இசையில் பட்டம் பெற்றவர். மெட்றாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ம்யூஸிக்கில் வெஸ்டர்ன் ம்யூஸிக் பயில்கின்றார்.

வழுவூர் சாம்ராஜ் அவர்களின் குழுவின் நடன நிகழ்ச்சிகளுக்கு பாடல்களை பாடியுள்ளார். 1993‍ல் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் பாடியுள்ளார். 1999ல் சிங்கப்பூரில் உள்ள ப்யூபிள்ஸ் தியேட்டரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று ஆர்கெஸ்ட்ரா மற்றும் சேர்ந்திசைக் குழுவினரைப் பயிற்றுவித்துள்ளார்.

தேசிய நாடகப் பள்ளியின் ராமானுஜர் நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார். அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை குழுவிற்கு மேற்கத்திய இசைப் பயிற்சி அளித்துள்ளார்.

1995ல் ஆயனாவிற்காக கர்நாடக இசை அமைத்துள்ளார்.

2001ல் பிரளயனின் சென்னைக் கலைக் குழுவின் உப கதை நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார்.

75 பாடகர்கள் மற்றும் 10 இசைக் கருவிகளையும் கொண்ட குழுவிற்கு சில அற்புதமான பழைய கீதங்களையும் ஸ்வரஜதிகளையும் கற்றுத்தந்து அரங்கேற்றியுள்ளார்.

இத்தனை திறமை படைத்த ஆசிரியை எங்களின் பயிற்சியாளராகவும், இசை நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்து குழுவின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் ஆதார ஸ்ருதியாக இருக்கின்றார். ஆசிரியர் தினமான இன்று அவருக்கு எங்களின் வணக்கங்களை உரித்தாக்குகின்றோம்.