Thursday, November 19, 2009

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் நடனங்கள்

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் சுருதிலயா குழுவினர் பாடும்போது பின்னணித்திரையில் பாடலின் பொருளை விளக்கும் படக் காட்ச்சிகளும், முகப்பு மேடையில் நடன நிகழ்வும் எற்பாடாகியிருந்தது. பீட் குழுவினர் பாடும்போது க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பாடகர்கள் பின்னணித்திரையில் காட்டப்பட்டார்கள்.

நடன நிகழ்வுகள் அனைத்தும் பாராட்டும் வகையில் இருந்தன. ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையத்தினர் ஆடிய சக்கர நாற்காலி நடனம் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது. அவர்களை பாராட்டும் வகையில் மேடையில் அவர்களின் சக்கர நாற்காலி அணிவகுப்பு நடைபெற்றபோது இரண்டு இசைக்குழுவினரும் இணைந்து ஆடோகிராக்ஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியது அன்றைய தினத்தின் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருந்தது.

பாரதியின் காணி நிலம் வேண்டும் பாடலுக்கு மலேசிய கிராமிய உடையில் விவாசியகள் பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டது உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அழகுற சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் இரண்டாவது சரணத்தின் போது பாரதி காட்சியில் நுழைந்தபோது, மிகையல்ல மயிர்க்கால்கள் கூச்சமுற்றன. அதிலும் பாரதி பராசக்தியிடம் விவசாயிகளைக் காட்டி காணி நிலம் வேண்டும் என்று சுழண்டாடி கேட்ட போது மீண்டும் புல்லரித்து. இந்த நடன நிகழ்வை மேடைக்கு முன்புறம் இருந்து பார்க்காமல் போனோமே என்று வருந்தினேன்.

பாடகர்களின் வரிசையில் இருக்கும்போது இரு குழுவினரும் பாடும் பாடல்களுக்கு நடைபெறும் நடன நிகழ்வுகளை முழுமையாகப் பார்க்கமுடியாது. நடத்துனரின் சமிக்ஞைகளை கவனமாக பார்க்கவேண்டியிருக்கும். அப்படியும் ஒரு பகுதி நடனம் நம் பார்வைப்பகுதியில் வரும்போது நடனத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான ஒரு பாடல் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா படப்பாடலான காற்றினிலே வரும் கீதம். இந்தப் பாடலுக்கு சீன நடனக்குழுவினர் ஆடிய நடனம் ஆஹா என்று வாயாரப் பாராட்டும் வகையில் இருந்த்தது. இளமை எழிலோடு, நளின வளைவோடு, காதல் பாவத்தோடு, திகைப்பூட்டும் அடவுகளோடு, முற்றிலும் புதிய பாங்கோடு ஆடிய நடனம் இனொரு முறை பார்க்கவேண்டும் என்பதாக இருந்தது. பெண்கள் களி நடனமாடிக் கொண்டிருக்கும்போது அங்கு தன் இணையைத்தேடி வரும் ஆண்கள் நடனமாடியவாறே அவர்களை நெருங்க முயலும்போது அவர்களின் கையில் சிக்காமல் ஒர் இழையில் தப்பித்துக் கொண்டு ஒடும் பெண்கள் தங்களின் நகர்வுகளை ஆண்கள் கணிக்க முடியாமல் திணறும் வகையில் ஒரு நடன பாணி அமைக்கப் பட்டிருந்தது. நம்முடைய கிராமங்களில் கோழிகள் பிடிக்க முடியாத வகையில் திசையும், கோணமும் மாற்றி மாற்றி ஒடும் போக்கை பார்த்து நடன பாணியை உருவாக்கியிருப்பார்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது.

மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலியாக அவருடைய காதலியை அவர் பிரிய நேர்ந்தபோது அவளுக்காக அவர் எழுதி இசையமைத்த யூ வேர் நாட் அலோன் என்று தொடங்கும் பாடலைப் பாடினர். அந்த பாடலுக்கு அரங்கத்தினரிடமிருந்து எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. மைகேல் ஜாக்ஸன் பற்றிய க்ளிப்பிங்க்ஸ் பின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பாதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மைகேல் ஜாக்ஸன் போன்ற தோற்றத்தில் ஒரு நடனக்கலைஞர் மேடையில் தோன்றி சில வினாடிகள் மைகேல் ஜாக்ஸனைப் போலவே நடனமாடிவிட்டு சென்றார். அப்படி ஒரு சில நொடிகள் மட்டுமே வந்து சென்றாலும் அனைவரின் உள்ளத்தையும் கவ்விச் சென்றார்.

இரண்டு மூன்று பாடல்களுக்கு நடனமாடிய பவானி கணேசமூர்த்தியின் பரதாஞ்சலி குழுவினர் ஆடிய நடனம் பண்பட்ட வகையில் இருந்தது. குழுவினரிடையே காணப்பட்ட தொடர்பாற்றல் தெளிவாக வெளிப்பட்டது.

ராதாகிருக்ஷ்ணன் பரதஞ்சலி குழுவினர், க்ஷர்மிலி ஃபைனார்ட்ஸ் குழுவினரும் தங்களின் நடனங்களில் மிளிர்ந்தனர்.

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம்

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம். சீன முரசு மற்றும் ட்ராகோன், பஞ்சாபி பங்க்ரா, தவில் மற்றும் உறுமி, மலேசியர்களின் தப்பு குழிவினர் மலேசிய ஒற்றுமையை முசன்குகிறார்கள்.

Tuesday, November 17, 2009

ஸங்கீத் ஸ்வாகத்தில் பீட் குழுவின் பாடல்கள்

பீட் குழுவின் சேர்ந்திசைக்குழுவின் மலேசிய இசைப் பயணத்தில் பல சிறப்புகள் உள்ளன.

வெளி நாடு சென்று நிகழ்ச்சி நடத்திய முதல் தமிழ் சேர்ந்திசைக்குழு என்று உறுதியாகச் சொல்லலாம்.

திருக்குறளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

புதுக் கவிதைகளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

சேர்ந்திசை முன்னோடி திரு எம் பி ஸ்ரீநிவாஸன் அவர்களின் சிறந்த மாணவியான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் அதிக எண்ணிக்கையிலான் பாடல்களை பாடியுள்ளோம்.

திருக்குறள் உலகப்பொதுமொழி என்பதால் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இசையமைக்கப்பட்டுள்ளது. குறளின் பொருளுக்கு ஏற்ப ராகம், மெட்டு, சேர்ந்திசை நுட்பங்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்தப் படுள்ளது.

புதுக்கவிதைகள் மிகக்குறைந்த வரிகளைக் கொண்டதாக இருந்தாலும் சேர்ந்திசைப் பகுதிகள், முன்னிசை, இடை இசை, முடிவு ஆகியவை கவிதையின் பொருளை சிறப்பாக உயர்திப்பிடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசை வகையில் இருக்கும் வண்ணம் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இருந்தன. திருக்குறள், புதுக் கவிதைகள், பாரதியின் பாடல்கள், கிராமியப் பாடல்கள் ஆகியன‌ பெண் சமத்துவம், உலக அமைதி, மத நல்லிணக்கம், சுதந்திர தாகம் முதலிய பல்வேறு கருத்துக்களை கூறுவதாக இருந்தன. சேர்ந்திசை முன்னோடி எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்களின் இசையமைப்பிலான பாடல்களூம் இருந்தன.

திருக்குறள், பாரதியின் காக்கைச் சிறகினிலே, வாழைக்கா ஏத்தும் வண்டி என்ற கிராமிய பாடல் ஆகியன பெறுத்த வரவேற்பைப் பெற்றன. மொழி தெரியாதவர்களுக்குக் கூட வாழைக்கா ஏத்தும் வாண்டி என்ற பாடல் மிகவும் பிடித்துவிட்டது. அதுதான் கிராமியப் பாடலின் சிறப்பு.

சினிமா இசை, பக்தி இசை ஆகிய இரண்டையும் தாண்டி சிறந்த கருத்துக்களை கூறும் சிறந்த வடிவமான சேர்ந்திசை வடிவில் பாடும் குழு என்ற பாராட்டை பெற்றது. குறிப்பாக சுருதிலயா குழுவினரின் பாராட்டைப் பெற்றது. பெரும் நிறுவனங்களின் கையில் இருந்து கொண்டு அவர்கள் தரும் இசையைத்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுள்ள நிலைமையை மக்களுக்கான இசையை இயக்கமாக கொண்டு செல்லவாய்ப்புள்ள வடிவமாக பார்க்கப்பட்டது. "சினிமா பாடல்கள் நிகழ்ச்சி என்று நினைத்து வந்தேன் ஆனால் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. சென்னை வரும்போது கேட்க விரும்புகிறேன்" என்று கோலாலம்பூர் சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் நிகழ்சியைப் பார்த்த ஒருவர் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு வினவினார். அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு வேலையாகச் சென்றுவிட்டேனே என்று அவருடைய நண்பர் வருத்தப்பட்டார். கடல் கடந்த இடத்தில் இப்படியான பாராட்டை கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

பாடல்களின் பட்டியல்
1. திருக்குறள்: ஈன்ற பொழுதில், குழலினிது, கற்க கசடற, ஒழுக்கம் விழுப்பம், துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும்
2. நாரை நடக்கும் என்று தொடங்கும் புதுக் கவிதை
3. மனுலாகோ என்று தொடங்கும் கபீரின் ஹிந்தி மொழி ஹிந்துஸ்தானி பாடல்
4. அந்தபுறாக்கள் என்று தொடங்கும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்
5. மேற்கத்திய இசை ( ஒபேரா இசை போன்றது)
6. ஜய ஜய பாரத என்று தொடங்கும் பாரதியின் பாடல்
7. பாடும் பறவைகளே என்ற கே சி எஸ் அருணாசலத்தின் பாடல்.
8. காக்கைச் சிறகினிலே என்று தொடங்கும் பாரதியின் பாடல்
9.வாழைக்கா ஏத்தும் வண்டி என்று தொடங்கும் கிராமியப் பாடல்.

ஸ்ருதிலயா குழுவோடு செர்ந்து பாடிய பாடல்கள்
1. அச்சமில்லை என்று தொடங்கும் பாரதியின் பாடல்
2. செம்பருத்தி பூவின் சிறப்பை மலேசிய, சீன, தமிழ் மொழிகளில் பழைய தமிழ் சினிமா பாடல் மெட்டில்
3. ஆணும் பெண்ணும் என்று தொடங்கும் பாரதியின் பாடல்
4. வானம் ஒன்றுதான் என்று தொடங்கும் உலக அமைதியை வலியுறுத்தும் பாடல்
5. ஒவொரு பூக்களுமே என்று தொடங்கும் சினிமா பாடல்
6. மதுரை மணி ஐய்யரின் மேற்கத்திய இசைக் கோர்வை
7. காற்றினிலே வரும் கீதம் என்று தொடங்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பட பாடல்.

பதின் வயதினர் அதிகமாக இருந்த ஸ்ருதிலயா குழுவினரோடு சேர்ந்து பாடியது பீட் குழுவினருக்கு பெருத்த உற்சாகத்தைத் தந்தது.

Saturday, November 7, 2009

கோலாலம்பூர் கன்வெஷன் சென்டெர் ப்ளீனரி ஹால்

கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டெர் - ப்ளீனரி ஹாலில் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள்

சங்கீத் ஸ்வாகத்

சங்கீத் ஸ்வாகத் - ஸ்ருதிலயா மற்றும் பீட் குழுவினர் சேர்ந்திசைக்கின்றனர்

சங்கீத் ஸ்வாகத் - மலேசிய ஒருமைப்பாடு

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியின் துவக்கமே லய சங்கமத்துடன் துவங்கியது. முதலில் மலேசிய‌ கலைஞர்களின் அணி தப்பட்டை போன்ற லய கருவியை ஒரே சீராகத் தட்டியவாறே அரங்கில் நுழைந்து மேடை ஏறினார்கள். அடுத்து தவில் மற்றும் உருமி மேளத்தை முழங்கியவாறே தமிழ் கலைஞர்களின் அணி வந்து மேடை ஏறினார்கள். அடுத்து சீனக் கலைஞர்கள் மேடையின் பின் புறம் வழியாக முரசு போன்ற தங்களின் கருவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து முழங்கினார்கள். அவர்களின் இரண்டு ட்ராகன்கள் அரங்கத்தின் இருபுற வாயிலின் வழியாக நுழைந்து மேடையின் இரு புற படிக்கட்டுகளின் வழியே மேடை ஏறி வந்து மேளத்திற்கு ஏற்ப ஆடின. கடைசியாக பஞ்சாபி குழுவினரின் பாங்க்ரா குழுவினர் தங்களின் மேளங்களோடு முழங்கியவாறே மேடை ஏறினர். எட்டு நிமிட லய சங்கமத்திற்குப் பிறகு ஒவ்வொரு குழுவாக மேடையிலிருந்து இறங்கிச் சென்றனர். ஒவ்வொரு குழுவும் தஙகளின் கலாச்சார உடையில் வந்து முழங்கியது மலேசிய நாட்டில் உள்ள இனங்களின் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது. இந்த ஒற்றுமையின் சாரத்தை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காண முடிந்தது. இந்த முதல் நிகழ்ச்சியான லய சங்கமத்தை தலைமையெற்று பங்க்ரா மேளத்தை முழங்கிச்சென்ற ட்ரம்மர் சிவம் என்பவர் 'எம்' என்கிற வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர் என்பது ஒரு சிறப்பு.

இந்த முக்கிய கருத்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிலைப்பெற்று இருந்தது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு மேற்கத்திய ட்ரம் வாசித்ததும், மதுரை மணி ஐயரின் மேற்கத்திய இசை குறிப்புகளில் மலேசிய சீன தமிழர் வாழும் பெருமை இந்நாட்டிற்கே என்ற வரிகளை தமிழிலும், மலேசிய மொழியிலும் சேர்த்துப்பாடியதும், மலேசிய தேசிய மலரான செம்பருத்தியை பற்றிய பாடலை மலேசிய, சீன மற்றும் தமிழ் மொழிகளில் பழைய தமிழ் படத்தில் பாடலான‌ மல்லிகை முல்லை ரோஜா என்ற மெட்டில் பாடியதும், எம் எஸ் சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு சீன நடன கலைஞர்களை நடனமாட வைத்ததும், இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கீ போர்டு, ட்ரம்ஸ், சீன இசைக் கருவிகளான குஷெங், ஷெங், சீன புல்லாங்குழல், மலேசிய இசைக் கருவிகளான கோர்ட் மற்றும் ரெபனா ஆகிய கருவிகளையும் சேர்த்து இசைக்க வைத்ததும் இன ஒற்றுமையை இழையாகக் கொண்டதுதான் ஸ‌ங்கீத் ஸ்வாகத் என்பதை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. ஸ்ருதிலயாவிற்கு புல்லாங்குழல் வாசித்தவர் நம்முடைய பீட் சேர்ந்திசைக்குழுவில் இருந்த, திருச்சி பெஃபி டி என் மாநாட்டின் கலை இரவில் புல்லாங்குழல் வாசித்தவருமான இன்ட் பேங்க் ஹவுஸிங்கில் பணிபுரிந்த தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் கடைசி பாடலாக மலேசிய தேசிய பாடல் ஒன்றை பாடியவாறே அனைத்துக் கலைஞர்களும் மலேசியக் கொடியை அசைத்து சாய்ந்தாடி மகிழ்ந்தனர்.

பீட் குழுவின் மலேசியப் பயணம்

ஸ்ருதிலயா இசைப்பள்ளி மற்றும் ஊனமுற்றோரின் தன்னிலைப்பயிற்சி மையத்தின் அழைப்பினை ஏற்று நவம்பர் முதல் தேதி கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் உள்ள ப்ளீனரி அரங்கில் நடை பெற்ற சங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்று வந்துவிட்டோம்.

ஸ்ருதி லயா குழுவும், பீட் குழுவும் இணைந்தும் தனித் தனியாகவும் படல்களைப்பாடினோம். ஸ்ருதிலயா பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் நடன ஏற்பாடு இருந்த்து. வெவேறு குழுக்கள் நடனமாடின. ஒவ்வொரு பாடல்கள் பற்றியும், நடனநிகழ்வுகள் பற்றியும் தனியே எழுதவுள்ளோம்.

அரங்கம் மிக பிரமாதமாக இருந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரியது. ஒலி மேம்பாடு சிறப்பாக செய்யப்பட்ட அரங்கு. ஒளி அமைப்பும், ஒளிப் பதிவு அமைப்புகளும் கூட மேம்பட்டவை. ஆகவே எங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடிந்தது. பார்வையாளர்கள் நிறைந்த அரங்கு எங்களின் நிகழ்ச்சியைப் பாராட்டியது.

ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் முதன்முதலாக வெளிநாடு சென்று வெற்றிகரமான சேர்ந்திசை நிகழ்ச்சியினை நடத்தி பாராட்டினைப் பெற்று மகிழ்ச்சியோடு திரும்பி வந்துள்ளோம்.