Showing posts with label choir in malaysia. Show all posts
Showing posts with label choir in malaysia. Show all posts

Saturday, November 28, 2009

பீட் குழுவின் மலேசிய பயணம் மாபெரும் வெற்றி

-Bank Workers Unity December 2009 இதழில் சி பி கிருஷ்ணன்

மலேசிய தலை நகர் கோலாலம்பூரிலிருந்து 2600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் முக்கிய நகரமான் சென்னையில் உள்ள வங்கி ஊழியர் கலைக்குழுவான பீட் மலேசியாவில் உள்ள ஊனமுற்றோருக்கு உதவுவதற்காக் நிதி திரட்ட பெரும் பங்காற்றியது என்றால் அது வங்கி ஊழியருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே பெருமை வாய்ந்த நிகழ்வாகும்.

கோலாலம்பூர் ஸ்ருதிலயா கலைக்குழு தொடங்கப்பட்டு வெள்ளி விழா கொண்டாடும் வகையிலும், ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பத்தாண்டு நிறைவுறுவதை ஒட்டியும் 2009 நவம்பர் முதல் தேதி இரவு 8.30 மணிக்கு மிகச் சிறப்பான கலை நிகழ்ச்சி துவங்கியது.

ஸ்ருதிலயாவும் பீட்டும் இணைந்து குழுமியிருந்த மூவாயிரம் பொதுமக்களை மூன்று மணி நேரம் தங்கள் இசைத்திறமையால் வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்றனர் என்பதே உண்மை.

ஒரு புறம் ஸ்ருதிலயாவில் 15 வயதிலிருந்து 25 வயது வரையிலான இளம் பெண்களும் ஆண்களும் கொண்ட துடிப்பு மிக்க இளம் பாடகர்கள் சேர்ந்திசையின் மூலம் பாரதியார் பாடல்கள், அதில் வெளிப்பட்ட கம்பீரம், அச்சமின்மை, காதல் ரசம், பக்தி ரசம், மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலி, மலேசியாவின் தேசிய மலருக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய கொடிக்கும் உரிய முக்கியத்துவத்தையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் கர்நாடக, மேற்கத்திய, மெல்லிசை மூலமாக மிகச்சிறந்த இசையை வெளிப்படுத்தினர்.

அதற்கு டிரம்ஸ், தபேலா, கீ போர்டு வாசித்த கலைஞர்களும் வீணை ( டாக்டர் காயத்திரி ஆறுமுகம்) புல்லாங்குழல் (ஸ்ரீதர்) சீன புல்லாங்குழல், ஷெங், குஷெங் கலைஞர்களும் ஒத்திசைவாக பெரும் பங்காற்றினர். ஸ்ருதி லயாவின் முதல்வர் திருமதி ராஜலக்ஷ்மி அவர்களின் ஒரு வருட கடும் பயிற்சியும், உழைப்பும் பளிச்சென வெளிப்பட்டது.

வங்கி ஊழியர் கலைகுழுவின் ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. உலகப்பொதுமறை என்று எல்லோராலும் போற்றப்படும் நூற்றுக் கணக்கான மொழியில் மொழிபெயர்ப்பான திருக்குறள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய 'அந்தபுறாக்கள்' பாடல், கிராமத்து மக்களிடையே உள்ள வாழ்க்கை போராட்டத்தையும், ஊடலையும் வெளிப்படுத்தும் 'வாழ்க்காய் ஏற்றும் வண்டி' நாட்டுப்பற்றையும், சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் 'ஜெய ஜெய பாரத' பாடல் இப்படி தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் வழங்கப்பட்ட பாடல்களை தாளம் போட்டு ரசித்தனர் மலேசிய ரசிகர்கள்.

மலேசிய நாட்டில் மலேய மக்கள் பெரும்பான்மையாக (சுமார் 60%) உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களோடு சீனர்களும் (சுமார் 30%) இந்தியர்கள் (சுமார் 10%) நல்லிணக்கத்துடன், சுதந்திரமாக அவரவர்களின் வழிபாட்டு உரிமைகளோடு வாழ்கின்றனர். மலேசிய மக்களின் ரசிப்பினை வெளிப்படுதின விதமும், பாராட்டும் கலைஞர்களை மிகுந்த அளவில் உற்சாகப்படுத்தியது, ஒரு நிலையில் பீட் என்ற பெயரை தொகுப்பாளர் உச்சரிக்கும்போதே ரசிகர்களிடையே மிகுந்த கரவொலி எழுந்தது.

ஒட்டு மொத்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, வணிக நோக்கத்துடன் சினிமா கலைஞர்கள் வழ்ங்கும் பிரம்மாண்டத்தினைவிட பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அதற்கு பக்க பலமாக நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரல் வளமும், தொகுப்புரையும், ஐந்து நாட்டியக் குழுவைச்சேர்ந்த கலைஞர்கள் ‍ அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் பாட்டிற்கு ஏற்றவாறு பாவத்துடன் ஆடிய நாட்டியமும், ஒலி ஒளி அமைப்பும், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மலேசியக் கலைஞர்களின் தப்பு வாசிப்பும், தமிழ் கலைஞர்களின் தவில் மற்றும் உருமியும், பஞ்சாபி கலைஞர்களின் டோலக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒலியை துல்லியமாக வெளிப்படுத்தும் பிரம்மாணடமான அரங்கமும் அமைந்தன.

Thursday, November 19, 2009

சுருதி லயா இசைப் பள்ளி மாணவிகள்

ஸ்ருதி லயா இசைப் பள்ளி மாணவிகள்

திரு சிவ ஷண்முக ரெட்டி, Chariman, ILTC.

ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையத்தின் தலைவர் திரு சிவ ஷண்முக ரெட்டி.

திருமதி ராஜராஜேஸ்வரியும் டான் ஆய் போஓயும்

பீட் குழுவின் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரியுடன் சீன இசைக்கருவியான குஷெங் கலைஞரும் பல் கலைக் கழக‌ ஆராய்ச்சி மாணவியுமான டான் ஆய் போஓய்

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம்

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம். சீன முரசு மற்றும் ட்ராகோன், பஞ்சாபி பங்க்ரா, தவில் மற்றும் உறுமி, மலேசியர்களின் தப்பு குழிவினர் மலேசிய ஒற்றுமையை முசன்குகிறார்கள்.

Tuesday, November 17, 2009

ஸங்கீத் ஸ்வாகத்தில் பீட் குழுவின் பாடல்கள்

பீட் குழுவின் சேர்ந்திசைக்குழுவின் மலேசிய இசைப் பயணத்தில் பல சிறப்புகள் உள்ளன.

வெளி நாடு சென்று நிகழ்ச்சி நடத்திய முதல் தமிழ் சேர்ந்திசைக்குழு என்று உறுதியாகச் சொல்லலாம்.

திருக்குறளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

புதுக் கவிதைகளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

சேர்ந்திசை முன்னோடி திரு எம் பி ஸ்ரீநிவாஸன் அவர்களின் சிறந்த மாணவியான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் அதிக எண்ணிக்கையிலான் பாடல்களை பாடியுள்ளோம்.

திருக்குறள் உலகப்பொதுமொழி என்பதால் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இசையமைக்கப்பட்டுள்ளது. குறளின் பொருளுக்கு ஏற்ப ராகம், மெட்டு, சேர்ந்திசை நுட்பங்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்தப் படுள்ளது.

புதுக்கவிதைகள் மிகக்குறைந்த வரிகளைக் கொண்டதாக இருந்தாலும் சேர்ந்திசைப் பகுதிகள், முன்னிசை, இடை இசை, முடிவு ஆகியவை கவிதையின் பொருளை சிறப்பாக உயர்திப்பிடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசை வகையில் இருக்கும் வண்ணம் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இருந்தன. திருக்குறள், புதுக் கவிதைகள், பாரதியின் பாடல்கள், கிராமியப் பாடல்கள் ஆகியன‌ பெண் சமத்துவம், உலக அமைதி, மத நல்லிணக்கம், சுதந்திர தாகம் முதலிய பல்வேறு கருத்துக்களை கூறுவதாக இருந்தன. சேர்ந்திசை முன்னோடி எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்களின் இசையமைப்பிலான பாடல்களூம் இருந்தன.

திருக்குறள், பாரதியின் காக்கைச் சிறகினிலே, வாழைக்கா ஏத்தும் வண்டி என்ற கிராமிய பாடல் ஆகியன பெறுத்த வரவேற்பைப் பெற்றன. மொழி தெரியாதவர்களுக்குக் கூட வாழைக்கா ஏத்தும் வாண்டி என்ற பாடல் மிகவும் பிடித்துவிட்டது. அதுதான் கிராமியப் பாடலின் சிறப்பு.

சினிமா இசை, பக்தி இசை ஆகிய இரண்டையும் தாண்டி சிறந்த கருத்துக்களை கூறும் சிறந்த வடிவமான சேர்ந்திசை வடிவில் பாடும் குழு என்ற பாராட்டை பெற்றது. குறிப்பாக சுருதிலயா குழுவினரின் பாராட்டைப் பெற்றது. பெரும் நிறுவனங்களின் கையில் இருந்து கொண்டு அவர்கள் தரும் இசையைத்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுள்ள நிலைமையை மக்களுக்கான இசையை இயக்கமாக கொண்டு செல்லவாய்ப்புள்ள வடிவமாக பார்க்கப்பட்டது. "சினிமா பாடல்கள் நிகழ்ச்சி என்று நினைத்து வந்தேன் ஆனால் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. சென்னை வரும்போது கேட்க விரும்புகிறேன்" என்று கோலாலம்பூர் சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் நிகழ்சியைப் பார்த்த ஒருவர் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு வினவினார். அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு வேலையாகச் சென்றுவிட்டேனே என்று அவருடைய நண்பர் வருத்தப்பட்டார். கடல் கடந்த இடத்தில் இப்படியான பாராட்டை கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

பாடல்களின் பட்டியல்
1. திருக்குறள்: ஈன்ற பொழுதில், குழலினிது, கற்க கசடற, ஒழுக்கம் விழுப்பம், துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும்
2. நாரை நடக்கும் என்று தொடங்கும் புதுக் கவிதை
3. மனுலாகோ என்று தொடங்கும் கபீரின் ஹிந்தி மொழி ஹிந்துஸ்தானி பாடல்
4. அந்தபுறாக்கள் என்று தொடங்கும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்
5. மேற்கத்திய இசை ( ஒபேரா இசை போன்றது)
6. ஜய ஜய பாரத என்று தொடங்கும் பாரதியின் பாடல்
7. பாடும் பறவைகளே என்ற கே சி எஸ் அருணாசலத்தின் பாடல்.
8. காக்கைச் சிறகினிலே என்று தொடங்கும் பாரதியின் பாடல்
9.வாழைக்கா ஏத்தும் வண்டி என்று தொடங்கும் கிராமியப் பாடல்.

ஸ்ருதிலயா குழுவோடு செர்ந்து பாடிய பாடல்கள்
1. அச்சமில்லை என்று தொடங்கும் பாரதியின் பாடல்
2. செம்பருத்தி பூவின் சிறப்பை மலேசிய, சீன, தமிழ் மொழிகளில் பழைய தமிழ் சினிமா பாடல் மெட்டில்
3. ஆணும் பெண்ணும் என்று தொடங்கும் பாரதியின் பாடல்
4. வானம் ஒன்றுதான் என்று தொடங்கும் உலக அமைதியை வலியுறுத்தும் பாடல்
5. ஒவொரு பூக்களுமே என்று தொடங்கும் சினிமா பாடல்
6. மதுரை மணி ஐய்யரின் மேற்கத்திய இசைக் கோர்வை
7. காற்றினிலே வரும் கீதம் என்று தொடங்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பட பாடல்.

பதின் வயதினர் அதிகமாக இருந்த ஸ்ருதிலயா குழுவினரோடு சேர்ந்து பாடியது பீட் குழுவினருக்கு பெருத்த உற்சாகத்தைத் தந்தது.

Saturday, November 7, 2009

கோலாலம்பூர் கன்வெஷன் சென்டெர் ப்ளீனரி ஹால்

கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டெர் - ப்ளீனரி ஹாலில் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள்

சங்கீத் ஸ்வாகத் - மலேசிய ஒருமைப்பாடு

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியின் துவக்கமே லய சங்கமத்துடன் துவங்கியது. முதலில் மலேசிய‌ கலைஞர்களின் அணி தப்பட்டை போன்ற லய கருவியை ஒரே சீராகத் தட்டியவாறே அரங்கில் நுழைந்து மேடை ஏறினார்கள். அடுத்து தவில் மற்றும் உருமி மேளத்தை முழங்கியவாறே தமிழ் கலைஞர்களின் அணி வந்து மேடை ஏறினார்கள். அடுத்து சீனக் கலைஞர்கள் மேடையின் பின் புறம் வழியாக முரசு போன்ற தங்களின் கருவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து முழங்கினார்கள். அவர்களின் இரண்டு ட்ராகன்கள் அரங்கத்தின் இருபுற வாயிலின் வழியாக நுழைந்து மேடையின் இரு புற படிக்கட்டுகளின் வழியே மேடை ஏறி வந்து மேளத்திற்கு ஏற்ப ஆடின. கடைசியாக பஞ்சாபி குழுவினரின் பாங்க்ரா குழுவினர் தங்களின் மேளங்களோடு முழங்கியவாறே மேடை ஏறினர். எட்டு நிமிட லய சங்கமத்திற்குப் பிறகு ஒவ்வொரு குழுவாக மேடையிலிருந்து இறங்கிச் சென்றனர். ஒவ்வொரு குழுவும் தஙகளின் கலாச்சார உடையில் வந்து முழங்கியது மலேசிய நாட்டில் உள்ள இனங்களின் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது. இந்த ஒற்றுமையின் சாரத்தை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காண முடிந்தது. இந்த முதல் நிகழ்ச்சியான லய சங்கமத்தை தலைமையெற்று பங்க்ரா மேளத்தை முழங்கிச்சென்ற ட்ரம்மர் சிவம் என்பவர் 'எம்' என்கிற வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர் என்பது ஒரு சிறப்பு.

இந்த முக்கிய கருத்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிலைப்பெற்று இருந்தது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு மேற்கத்திய ட்ரம் வாசித்ததும், மதுரை மணி ஐயரின் மேற்கத்திய இசை குறிப்புகளில் மலேசிய சீன தமிழர் வாழும் பெருமை இந்நாட்டிற்கே என்ற வரிகளை தமிழிலும், மலேசிய மொழியிலும் சேர்த்துப்பாடியதும், மலேசிய தேசிய மலரான செம்பருத்தியை பற்றிய பாடலை மலேசிய, சீன மற்றும் தமிழ் மொழிகளில் பழைய தமிழ் படத்தில் பாடலான‌ மல்லிகை முல்லை ரோஜா என்ற மெட்டில் பாடியதும், எம் எஸ் சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு சீன நடன கலைஞர்களை நடனமாட வைத்ததும், இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கீ போர்டு, ட்ரம்ஸ், சீன இசைக் கருவிகளான குஷெங், ஷெங், சீன புல்லாங்குழல், மலேசிய இசைக் கருவிகளான கோர்ட் மற்றும் ரெபனா ஆகிய கருவிகளையும் சேர்த்து இசைக்க வைத்ததும் இன ஒற்றுமையை இழையாகக் கொண்டதுதான் ஸ‌ங்கீத் ஸ்வாகத் என்பதை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. ஸ்ருதிலயாவிற்கு புல்லாங்குழல் வாசித்தவர் நம்முடைய பீட் சேர்ந்திசைக்குழுவில் இருந்த, திருச்சி பெஃபி டி என் மாநாட்டின் கலை இரவில் புல்லாங்குழல் வாசித்தவருமான இன்ட் பேங்க் ஹவுஸிங்கில் பணிபுரிந்த தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் கடைசி பாடலாக மலேசிய தேசிய பாடல் ஒன்றை பாடியவாறே அனைத்துக் கலைஞர்களும் மலேசியக் கொடியை அசைத்து சாய்ந்தாடி மகிழ்ந்தனர்.

பீட் குழுவின் மலேசியப் பயணம்

ஸ்ருதிலயா இசைப்பள்ளி மற்றும் ஊனமுற்றோரின் தன்னிலைப்பயிற்சி மையத்தின் அழைப்பினை ஏற்று நவம்பர் முதல் தேதி கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் உள்ள ப்ளீனரி அரங்கில் நடை பெற்ற சங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்று வந்துவிட்டோம்.

ஸ்ருதி லயா குழுவும், பீட் குழுவும் இணைந்தும் தனித் தனியாகவும் படல்களைப்பாடினோம். ஸ்ருதிலயா பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் நடன ஏற்பாடு இருந்த்து. வெவேறு குழுக்கள் நடனமாடின. ஒவ்வொரு பாடல்கள் பற்றியும், நடனநிகழ்வுகள் பற்றியும் தனியே எழுதவுள்ளோம்.

அரங்கம் மிக பிரமாதமாக இருந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரியது. ஒலி மேம்பாடு சிறப்பாக செய்யப்பட்ட அரங்கு. ஒளி அமைப்பும், ஒளிப் பதிவு அமைப்புகளும் கூட மேம்பட்டவை. ஆகவே எங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடிந்தது. பார்வையாளர்கள் நிறைந்த அரங்கு எங்களின் நிகழ்ச்சியைப் பாராட்டியது.

ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் முதன்முதலாக வெளிநாடு சென்று வெற்றிகரமான சேர்ந்திசை நிகழ்ச்சியினை நடத்தி பாராட்டினைப் பெற்று மகிழ்ச்சியோடு திரும்பி வந்துள்ளோம்.

Wednesday, October 21, 2009

திருக்குறள்

திருக்குறள்: திருவள்ளுவர்
இசை: ராஜராஜேஸ்வரி

ராகம்: ஹம்ஸத்வனி

ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

ராகம்: தேஷ்

குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

ராகம்: மாயாமாளவ‌

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ராகம்: பெஹாக்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ராகம்: சங்கராபரணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

ராகம்: கௌரிமனோஹரி / படுதீப்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழொக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

Saturday, October 3, 2009

பிராகாரம் நுழைந்தவுடன் ........

பாடல்: ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

ப்ராகாரம் நுழைந்தவுடன் கனியாகிவிடுகிறது ‍ எலுமிச்சை
ப்ராகாரம் நுழைந்தவுடன் தீர்த்தமாகிவிடுகிறது தண்ணீர்
ப்ராகாரம் நுழைந்தவுடன் ப்ரசாதமாகிவிடுகிறது திருநீரும் பொட்டும்
எந்த மாற்றமும் இன்றி வெளியேறுகிறான் பக்தன்

ஐ ஆம் லிவிங்?

பாடல்: தாயம்மாஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

நாரை நடக்கும் கொளத்தில நண்டு புடிச்சதில்ல‌
முங்கு நீச்சல் போட்டியில மூச்சு திணறியதில்ல‌
கண் பறிச்சு வெல்லமிட்டு கட தேங்கா தின்னதில்ல‌
அடுக்கு பான அரிசி திருடி ஆத்துச் சோறு ஆக்கியதில்ல‌
ஆனாலும் சொல்கிறாய் ஐ ஆம் லிவிங் என்று

அந்த புறாக்கள்........

பாடல்: நெல்லை ஜெயந்தன்ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி


அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.

Thursday, August 13, 2009

கோலாலம்பூரில் BEAT சேர்ந்திசை நிகழ்ச்சி


மலேசியாவில் உள்ள Independent Living & Training centre சார்பில் Bank Employees Art Troupe (BEAT) - இன் சேர்ந்திசை நிகழ்ச்சியும், ஸ்ருதி லயாவின் இசை நிகழ்ச்சியும் வரும் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கோலாலம்பூர் convention centre அரங்கில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான மாதிரி நிதி ரசீது மேலே தரப்பட்டுள்ளது.