Friday, February 4, 2011

சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் ‍ ..... (2)

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதி பரந்துபட்ட பாரதம் முழுவதும் தனியாராட்சி செய்துவந்த அனைத்திந்திய வானொலி இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்ந்திசை இயக்கம் வேர்பிடித்து வளர்ந்தது. டெல்லியில் சதீஷ் பாடியா, சென்னையில் எம் பி எஸ். இவர்கள் இயக்கத்தில் சேர்ந்திசைக் குழுக்களை அங்கீகரித்து ஆதரவு நல்கியது வானொலி. புதிய பாடல்கள், புதிய குழுக்கள், பல்வேறு மாநிலங்கள் என்று இந்த இயக்கம் விரிவு படத் தொடங்கியது. அன்னை இந்திராவும், ஐ கே குஜராலும் இதன் ஆதர்சத் தலைவர்களாயினர்.

சேர்ந்திசையின் மிகப்பெரிய பயன் வேறுபாடுகளற்ற சமூக சங்கமத்திற்கு வழிவகுப்பது. சீருடை, சம அந்தஸ்து, சம் வாய்ப்பு, சமூகத் தீமைகளுக்கெதிரான குரல் என்பன போன்ற நடைமுறைச் செயல்பாடுகளினால் மானுட மேம்பாடு சாத்தியப்படுவதாயிற்று.

எம் பி எஸ் 1970 ஆம் ஆண்டு சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவை தொடங்கினார். சென்ற 40 ஆண்டுகளாக இக்குழு சோர்வில்லாமல் தனது பணியைச் செய்துவருகிறது.

சேர்ந்திசை என்பது என்ன? எம் பி எஸ்ஸின் தனிப் பங்களிப்பு என்ன? இன்றென்ன? நாளை என்ன?

நாலு பேர், நாற்பது பேர் கூடி நின்று பாடுவதல்ல சேர்ந்திசை. ஒவ்வொருவரின் தனித்தனி குரல் தன்மையை ஒட்டி அவரவர்கென்று ஓரிடம் தந்து, பாடலின் தன்மைக்கும் தாத்பரியத்துக்கும் ஏற்ப வாய்ப்பு தந்து இசையமைத்து பாடச் செய்வதே சேர்ந்திசை.

மேலை நாட்டில், நமது குரலை சொப்ரானோ (soprano) ஆல்டோ (alto) டெனார் (tenor) பாஸ் (boss) என்று முதலில் வகைப்படுத்துவார்கள். இந்த நாலு வகைகளையும் சொப்ரானோ .. 1, சொப்ரானோ .. 2, உச்ச டெனார், நடு டெனார் எனச் சேர்த்து எம் பி எஸ் ஆறுவகைப்படுத்துவார்.

குழுவில் உள்ளோர்க்கு இந்த ஆறுவகைப்படி இடமளிக்கப்படும். பாட்டின் இசைக்கு ஏற்ப அவரவர் பங்களிப்பு இருக்கும். தனிக்குரல் ஒலிப்பு, வகைக் குழுவின் ஒலிப்பு, ஒட்டுமொத்தக் குழுவின் ஒலிப்பு என வண்ண மயமாய் அமைவதே சேர்ந்திசை.

எம் பி எஸ் என்ற மேதையின் தனிப் பங்களிப்பு இந்த சேர்ந்திசை வகையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றதுதான். பாடலின் ஜீவனுக்கேற்ற இசை, குரல் வகைகளுக்கேற்ப வித்யாசங்களுக்கு வழியமைத்தல், மனிதக் குரலே மகத்தான இசைக்கருவி என்பதை உணர்ந்து பக்க வாத்தியங்கள் இல்லாமலேயே பாட்டை ஜொலிக்கச் செய்தல் இவைதாம் எம் பி எஸ்ஸின் சாதனைகள். சான்று: 'மழை' பாட்டு. சேர்ந்திசையை புதிய சிகரங்களுக்கு கொண்டு சென்றது அவரது ஆளுமையே!

எத்தனையோ இந்திய மொழிகளில் சேர்ந்திசைப் பாடல்கள் செய்திருக்கிறார். அந்த மேதை சொன்னார்: "பாட்டின் உள்ளே இருந்து பாடு. குழந்தையைப் பற்றிப் பாடவேண்டுமானால் குழந்தை உன் மடியில் இருப்பதாக எண்ணிப் பாடு. அம்மாவைப் பற்றிய பாட்டா, உன அம்மாவை நினைத்துக் கொள். 'ஒளிபடைத்த கண்ணினாய்' என்று பாடினால் அந்த மின்னல் உன் கண்ணில் தெறிக்கவேண்டும். பாப்பா பாட்டில் 'காறி உமிழ்ந்துவிடு' என்ற வரி வரும்போது எதிரில் அநியாயம் செய்பவர் யாரேனும் இருந்தால் தன்னையறியாமல் தன் முகத்தை அவசரமாகத் துடைத்துக் கொள்வதைப் பார்க்கலாம்" என்பார்.

எம் பி எஸ் கம்பீரமானவர். இந்த ஆளுமையை இன்றும் எம் ஒய் சி குழுவிலுள்ளோரிடம் பார்க்கலாம். சேர்ந்திசைத் தவத்தை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒத்திகையின் மூலமும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் தக்கவாறு இயற்றிக்கொண்டிருக்கிறார்களே! எம் ஒய் சியின் இன்றைய நடத்துனர்கள் டி ராமச்சந்திரன், லதா உன்னிகிருஷ்ணன், சுதா ராஜா இன்னும் பலர்.

எம் பி எஸ் இடதுசாரி இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். சமூக சீர்திருத்தம் என்பது வாய்ப்பேச்சாக இல்லாமல் புரட்சித் திருமணம் செய்து நிரூபித்தவர். சித்தூரில் 1925 செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்த மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் ஜாகிதா கிட்ச்லு என்ற காஷ்மீரத்து முஸ்லீமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். ஆதர்ச தம்பதியாக இருந்தவர்கள். மனைவி ஒரு விடுதலைப் போராட்ட வீரரின் மகள். இவர்களது திருமணம் பண்டித நேரு தலைமையில் நடந்தது. அந்த அற்புத தலைவனுக்கு பின்னாளில் கே சி எஸ் அருணாசலம் எழுதிய 'சிவந்த ரோஜா'வைக் கொண்டு சங்கீதாஞசலி செலுத்தினார்.

எம் பி எஸ்ஸின் சேர்ந்திசைக்கு முதல் மரியாதை அளித்த அகில இந்திய வானொலி இன்று எனோ பாராமுகமாக இருக்கிறது என்று சேர்ந்திசை அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள். தூர்தர்ஷன் குறித்தும் அந்த வருத்தம் இருக்கிறது. மாறிவிட்ட கலாசார சூழலில் சின்னத் திரை போன்ற சிருங்காரச் சாதனங்கள் ‍ தூர்தர்ஷன் நீங்கலாக சமுதாயத்தை சீரழித்தே தீருவது என்று சூளுரைத்துக் கொண்டு வீராவேசமாய் சுற்றி சுழன்று வருகிற இன்றைய சூழலில், நாலு காசு சம்பாதித்தாக வேண்டும் என்கிற நிர்பந்த சூழலில் அகில இந்திய ரேடியோவும் தூர்தர்ஷனும் சேர்ந்திசைக்குப் பழைய ஆதரவை தந்துதவ முடியாமல் இருக்கலாம். இதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

எம் பி எஸ் சேர்ந்திசையை மக்கள் இயக்கமாகத்தான் பார்த்தார். அதன் வழியாக கடைக்கோடி மக்களுக்கு அறிவூட்டவும் மானுடனேயம் ஆழ்ந்த வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தவும் ஆசைப்பட்டார். வெகுஜன ஊடகங்களாய் அகில இந்திய வானொலியும் தூர்தர்ஷனும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ந்திசைக் குழுக்கள் அமையவேண்டும் என்று விரும்பினார். இதில் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் கோவை 'பெர்க்ஸ்' குழுமப் பள்ளியின் நிறுவனர் தாளாளர் அமரர் இராம அரங்கநாதன். பெர்க்ஸ் பள்ளியில் எம் பி எஸ்ஸின் சேர்ந்திசை நிகழ்ச்சிகளும் பயிற்சிப் பட்டறைகளும் பல் நடந்தன.

1984 நவம்பர் 24, 25 தேதிகளில் கோவை வானொலியும் பெர்க்ஸ் பள்ளியும் இணைந்து ஏறக்குறைய 400 மாணவர்கள் இசை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தினோம். எம் பி எஸ் இரண்டு நாட்களும் முன்னிருந்து நடத்தித் தந்தார்.

கேரளத்தில் சேர்ந்திசை இயக்கம் ஓரளவு செம்மையாக நடந்து வருகிறது. சர்மா என்ற சமூகத் தொண்டர் தொடங்கிவைத்த நற்பணி.

எம் பி எஸ் பன்முகப் படைப்பாளி, திரைப்பட இசை அமைப்பாளராகப் பரிணமித்தார். அவர் இசை அமைத்த 'பாதை தெரியுது பார் திரைப்படம் எல்லா வகையிலும் ஒரு முன்னோடிப் படம். இசையமைப்பில் அவர் செய்த புதுமைகள் ஒரு முன்னோடி சரித்திரம். மலையாளத் திரை உலகம் அவரது மேதாவிலாசத்தை மதித்துப் போற்றியது. எம் பி எஸ் நடித்து இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' கலைப் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்த படம்.

பல மொழிகள் அறிந்தவர். சுய நலமே இல்லாதவர். திரையுலகத் தொழிற்சங்க இயக்கத்தில் பங்கேற்று பணி புரிந்தார். அந்த துறைக் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் 'உடனுகுடன் ஊதியம்' என்ற உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூகத்தின் ஒருமித்த அஞ்சலிக்கு உரியவர் எம் பி எஸ், ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும் சம்பிரதாய அஞலி அல்ல. மானுட நேயம் போற்றும் சேர்ந்திசையை இயக்கமாக்குதலும் அவர் சொன்னதைபோல 'பாட்டுக்குள்ளிருந்து பாடு'தலுமே அவரது ஆன்மாவைக் குளிர வைக்கிற அஞ்சலிகள்.

நன்றி: அமுத சுரபி ஜனவரி 2011,

No comments:

Post a Comment