Saturday, November 28, 2009

பீட் குழுவின் மலேசிய பயணம் மாபெரும் வெற்றி

-Bank Workers Unity December 2009 இதழில் சி பி கிருஷ்ணன்

மலேசிய தலை நகர் கோலாலம்பூரிலிருந்து 2600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் முக்கிய நகரமான் சென்னையில் உள்ள வங்கி ஊழியர் கலைக்குழுவான பீட் மலேசியாவில் உள்ள ஊனமுற்றோருக்கு உதவுவதற்காக் நிதி திரட்ட பெரும் பங்காற்றியது என்றால் அது வங்கி ஊழியருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே பெருமை வாய்ந்த நிகழ்வாகும்.

கோலாலம்பூர் ஸ்ருதிலயா கலைக்குழு தொடங்கப்பட்டு வெள்ளி விழா கொண்டாடும் வகையிலும், ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பத்தாண்டு நிறைவுறுவதை ஒட்டியும் 2009 நவம்பர் முதல் தேதி இரவு 8.30 மணிக்கு மிகச் சிறப்பான கலை நிகழ்ச்சி துவங்கியது.

ஸ்ருதிலயாவும் பீட்டும் இணைந்து குழுமியிருந்த மூவாயிரம் பொதுமக்களை மூன்று மணி நேரம் தங்கள் இசைத்திறமையால் வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்றனர் என்பதே உண்மை.

ஒரு புறம் ஸ்ருதிலயாவில் 15 வயதிலிருந்து 25 வயது வரையிலான இளம் பெண்களும் ஆண்களும் கொண்ட துடிப்பு மிக்க இளம் பாடகர்கள் சேர்ந்திசையின் மூலம் பாரதியார் பாடல்கள், அதில் வெளிப்பட்ட கம்பீரம், அச்சமின்மை, காதல் ரசம், பக்தி ரசம், மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலி, மலேசியாவின் தேசிய மலருக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய கொடிக்கும் உரிய முக்கியத்துவத்தையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் கர்நாடக, மேற்கத்திய, மெல்லிசை மூலமாக மிகச்சிறந்த இசையை வெளிப்படுத்தினர்.

அதற்கு டிரம்ஸ், தபேலா, கீ போர்டு வாசித்த கலைஞர்களும் வீணை ( டாக்டர் காயத்திரி ஆறுமுகம்) புல்லாங்குழல் (ஸ்ரீதர்) சீன புல்லாங்குழல், ஷெங், குஷெங் கலைஞர்களும் ஒத்திசைவாக பெரும் பங்காற்றினர். ஸ்ருதி லயாவின் முதல்வர் திருமதி ராஜலக்ஷ்மி அவர்களின் ஒரு வருட கடும் பயிற்சியும், உழைப்பும் பளிச்சென வெளிப்பட்டது.

வங்கி ஊழியர் கலைகுழுவின் ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. உலகப்பொதுமறை என்று எல்லோராலும் போற்றப்படும் நூற்றுக் கணக்கான மொழியில் மொழிபெயர்ப்பான திருக்குறள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய 'அந்தபுறாக்கள்' பாடல், கிராமத்து மக்களிடையே உள்ள வாழ்க்கை போராட்டத்தையும், ஊடலையும் வெளிப்படுத்தும் 'வாழ்க்காய் ஏற்றும் வண்டி' நாட்டுப்பற்றையும், சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் 'ஜெய ஜெய பாரத' பாடல் இப்படி தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் வழங்கப்பட்ட பாடல்களை தாளம் போட்டு ரசித்தனர் மலேசிய ரசிகர்கள்.

மலேசிய நாட்டில் மலேய மக்கள் பெரும்பான்மையாக (சுமார் 60%) உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களோடு சீனர்களும் (சுமார் 30%) இந்தியர்கள் (சுமார் 10%) நல்லிணக்கத்துடன், சுதந்திரமாக அவரவர்களின் வழிபாட்டு உரிமைகளோடு வாழ்கின்றனர். மலேசிய மக்களின் ரசிப்பினை வெளிப்படுதின விதமும், பாராட்டும் கலைஞர்களை மிகுந்த அளவில் உற்சாகப்படுத்தியது, ஒரு நிலையில் பீட் என்ற பெயரை தொகுப்பாளர் உச்சரிக்கும்போதே ரசிகர்களிடையே மிகுந்த கரவொலி எழுந்தது.

ஒட்டு மொத்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, வணிக நோக்கத்துடன் சினிமா கலைஞர்கள் வழ்ங்கும் பிரம்மாண்டத்தினைவிட பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அதற்கு பக்க பலமாக நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரல் வளமும், தொகுப்புரையும், ஐந்து நாட்டியக் குழுவைச்சேர்ந்த கலைஞர்கள் ‍ அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் பாட்டிற்கு ஏற்றவாறு பாவத்துடன் ஆடிய நாட்டியமும், ஒலி ஒளி அமைப்பும், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மலேசியக் கலைஞர்களின் தப்பு வாசிப்பும், தமிழ் கலைஞர்களின் தவில் மற்றும் உருமியும், பஞ்சாபி கலைஞர்களின் டோலக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒலியை துல்லியமாக வெளிப்படுத்தும் பிரம்மாணடமான அரங்கமும் அமைந்தன.

Thursday, November 19, 2009

சுருதி லயா இசைப் பள்ளி மாணவிகள்

ஸ்ருதி லயா இசைப் பள்ளி மாணவிகள்

திரு சிவ ஷண்முக ரெட்டி, Chariman, ILTC.

ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையத்தின் தலைவர் திரு சிவ ஷண்முக ரெட்டி.

ஸ்ருதிலயா இசைப் பள்ளியின் முதல்வர் திருமதி ராஜலக்ஷ்மி

வெள்ளி விழா காணும் ஸ்ருதிலயா இசைப் பள்ளியின் முதல்வர் திருமதி ராஜலக்ஷ்மி

திருமதி ராஜராஜேஸ்வரியும் டான் ஆய் போஓயும்

பீட் குழுவின் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரியுடன் சீன இசைக்கருவியான குஷெங் கலைஞரும் பல் கலைக் கழக‌ ஆராய்ச்சி மாணவியுமான டான் ஆய் போஓய்

காணி நிலம் வேண்டும் பராசக்தி

பாரதியின் காணி நிலம் வேண்டும் பராசக்தி பாடலுக்கு நடனமாடிய குழுவினர் .

பவானி கணேசமூர்த்தியின் பரதாஞ்சலி குழுவினர்

பவானி கணேசமூர்த்தியின் பரதாஞ்சலி குழுவினர்

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் நடனங்கள்

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் சுருதிலயா குழுவினர் பாடும்போது பின்னணித்திரையில் பாடலின் பொருளை விளக்கும் படக் காட்ச்சிகளும், முகப்பு மேடையில் நடன நிகழ்வும் எற்பாடாகியிருந்தது. பீட் குழுவினர் பாடும்போது க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பாடகர்கள் பின்னணித்திரையில் காட்டப்பட்டார்கள்.

நடன நிகழ்வுகள் அனைத்தும் பாராட்டும் வகையில் இருந்தன. ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையத்தினர் ஆடிய சக்கர நாற்காலி நடனம் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது. அவர்களை பாராட்டும் வகையில் மேடையில் அவர்களின் சக்கர நாற்காலி அணிவகுப்பு நடைபெற்றபோது இரண்டு இசைக்குழுவினரும் இணைந்து ஆடோகிராக்ஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியது அன்றைய தினத்தின் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருந்தது.

பாரதியின் காணி நிலம் வேண்டும் பாடலுக்கு மலேசிய கிராமிய உடையில் விவாசியகள் பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டது உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அழகுற சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் இரண்டாவது சரணத்தின் போது பாரதி காட்சியில் நுழைந்தபோது, மிகையல்ல மயிர்க்கால்கள் கூச்சமுற்றன. அதிலும் பாரதி பராசக்தியிடம் விவசாயிகளைக் காட்டி காணி நிலம் வேண்டும் என்று சுழண்டாடி கேட்ட போது மீண்டும் புல்லரித்து. இந்த நடன நிகழ்வை மேடைக்கு முன்புறம் இருந்து பார்க்காமல் போனோமே என்று வருந்தினேன்.

பாடகர்களின் வரிசையில் இருக்கும்போது இரு குழுவினரும் பாடும் பாடல்களுக்கு நடைபெறும் நடன நிகழ்வுகளை முழுமையாகப் பார்க்கமுடியாது. நடத்துனரின் சமிக்ஞைகளை கவனமாக பார்க்கவேண்டியிருக்கும். அப்படியும் ஒரு பகுதி நடனம் நம் பார்வைப்பகுதியில் வரும்போது நடனத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான ஒரு பாடல் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா படப்பாடலான காற்றினிலே வரும் கீதம். இந்தப் பாடலுக்கு சீன நடனக்குழுவினர் ஆடிய நடனம் ஆஹா என்று வாயாரப் பாராட்டும் வகையில் இருந்த்தது. இளமை எழிலோடு, நளின வளைவோடு, காதல் பாவத்தோடு, திகைப்பூட்டும் அடவுகளோடு, முற்றிலும் புதிய பாங்கோடு ஆடிய நடனம் இனொரு முறை பார்க்கவேண்டும் என்பதாக இருந்தது. பெண்கள் களி நடனமாடிக் கொண்டிருக்கும்போது அங்கு தன் இணையைத்தேடி வரும் ஆண்கள் நடனமாடியவாறே அவர்களை நெருங்க முயலும்போது அவர்களின் கையில் சிக்காமல் ஒர் இழையில் தப்பித்துக் கொண்டு ஒடும் பெண்கள் தங்களின் நகர்வுகளை ஆண்கள் கணிக்க முடியாமல் திணறும் வகையில் ஒரு நடன பாணி அமைக்கப் பட்டிருந்தது. நம்முடைய கிராமங்களில் கோழிகள் பிடிக்க முடியாத வகையில் திசையும், கோணமும் மாற்றி மாற்றி ஒடும் போக்கை பார்த்து நடன பாணியை உருவாக்கியிருப்பார்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது.

மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலியாக அவருடைய காதலியை அவர் பிரிய நேர்ந்தபோது அவளுக்காக அவர் எழுதி இசையமைத்த யூ வேர் நாட் அலோன் என்று தொடங்கும் பாடலைப் பாடினர். அந்த பாடலுக்கு அரங்கத்தினரிடமிருந்து எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. மைகேல் ஜாக்ஸன் பற்றிய க்ளிப்பிங்க்ஸ் பின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பாதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மைகேல் ஜாக்ஸன் போன்ற தோற்றத்தில் ஒரு நடனக்கலைஞர் மேடையில் தோன்றி சில வினாடிகள் மைகேல் ஜாக்ஸனைப் போலவே நடனமாடிவிட்டு சென்றார். அப்படி ஒரு சில நொடிகள் மட்டுமே வந்து சென்றாலும் அனைவரின் உள்ளத்தையும் கவ்விச் சென்றார்.

இரண்டு மூன்று பாடல்களுக்கு நடனமாடிய பவானி கணேசமூர்த்தியின் பரதாஞ்சலி குழுவினர் ஆடிய நடனம் பண்பட்ட வகையில் இருந்தது. குழுவினரிடையே காணப்பட்ட தொடர்பாற்றல் தெளிவாக வெளிப்பட்டது.

ராதாகிருக்ஷ்ணன் பரதஞ்சலி குழுவினர், க்ஷர்மிலி ஃபைனார்ட்ஸ் குழுவினரும் தங்களின் நடனங்களில் மிளிர்ந்தனர்.

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம்

ஸங்கீத் ஸ்வாகத் ‍ லய சங்கமம். சீன முரசு மற்றும் ட்ராகோன், பஞ்சாபி பங்க்ரா, தவில் மற்றும் உறுமி, மலேசியர்களின் தப்பு குழிவினர் மலேசிய ஒற்றுமையை முசன்குகிறார்கள்.

Tuesday, November 17, 2009

ஸங்கீத் ஸ்வாகத்தில் பீட் குழுவின் பாடல்கள்

பீட் குழுவின் சேர்ந்திசைக்குழுவின் மலேசிய இசைப் பயணத்தில் பல சிறப்புகள் உள்ளன.

வெளி நாடு சென்று நிகழ்ச்சி நடத்திய முதல் தமிழ் சேர்ந்திசைக்குழு என்று உறுதியாகச் சொல்லலாம்.

திருக்குறளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

புதுக் கவிதைகளை சேர்ந்திசையில் பாடிய முதல் குழு என்று சொல்லலாம்.

சேர்ந்திசை முன்னோடி திரு எம் பி ஸ்ரீநிவாஸன் அவர்களின் சிறந்த மாணவியான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் அதிக எண்ணிக்கையிலான் பாடல்களை பாடியுள்ளோம்.

திருக்குறள் உலகப்பொதுமொழி என்பதால் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இசையமைக்கப்பட்டுள்ளது. குறளின் பொருளுக்கு ஏற்ப ராகம், மெட்டு, சேர்ந்திசை நுட்பங்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்தப் படுள்ளது.

புதுக்கவிதைகள் மிகக்குறைந்த வரிகளைக் கொண்டதாக இருந்தாலும் சேர்ந்திசைப் பகுதிகள், முன்னிசை, இடை இசை, முடிவு ஆகியவை கவிதையின் பொருளை சிறப்பாக உயர்திப்பிடிக்கும் வகையில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது.

பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசை வகையில் இருக்கும் வண்ணம் கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, கிராமிய இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை ஆகிய இசை வடிவங்களில் இருந்தன. திருக்குறள், புதுக் கவிதைகள், பாரதியின் பாடல்கள், கிராமியப் பாடல்கள் ஆகியன‌ பெண் சமத்துவம், உலக அமைதி, மத நல்லிணக்கம், சுதந்திர தாகம் முதலிய பல்வேறு கருத்துக்களை கூறுவதாக இருந்தன. சேர்ந்திசை முன்னோடி எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்களின் இசையமைப்பிலான பாடல்களூம் இருந்தன.

திருக்குறள், பாரதியின் காக்கைச் சிறகினிலே, வாழைக்கா ஏத்தும் வண்டி என்ற கிராமிய பாடல் ஆகியன பெறுத்த வரவேற்பைப் பெற்றன. மொழி தெரியாதவர்களுக்குக் கூட வாழைக்கா ஏத்தும் வாண்டி என்ற பாடல் மிகவும் பிடித்துவிட்டது. அதுதான் கிராமியப் பாடலின் சிறப்பு.

சினிமா இசை, பக்தி இசை ஆகிய இரண்டையும் தாண்டி சிறந்த கருத்துக்களை கூறும் சிறந்த வடிவமான சேர்ந்திசை வடிவில் பாடும் குழு என்ற பாராட்டை பெற்றது. குறிப்பாக சுருதிலயா குழுவினரின் பாராட்டைப் பெற்றது. பெரும் நிறுவனங்களின் கையில் இருந்து கொண்டு அவர்கள் தரும் இசையைத்தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றுள்ள நிலைமையை மக்களுக்கான இசையை இயக்கமாக கொண்டு செல்லவாய்ப்புள்ள வடிவமாக பார்க்கப்பட்டது. "சினிமா பாடல்கள் நிகழ்ச்சி என்று நினைத்து வந்தேன் ஆனால் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது. சென்னை வரும்போது கேட்க விரும்புகிறேன்" என்று கோலாலம்பூர் சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் நிகழ்சியைப் பார்த்த ஒருவர் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு வினவினார். அந்த நிகழ்ச்சியை பார்க்காமல் வேறு வேலையாகச் சென்றுவிட்டேனே என்று அவருடைய நண்பர் வருத்தப்பட்டார். கடல் கடந்த இடத்தில் இப்படியான பாராட்டை கண்டு மகிழ்ச்சியடைந்தோம்.

பாடல்களின் பட்டியல்
1. திருக்குறள்: ஈன்ற பொழுதில், குழலினிது, கற்க கசடற, ஒழுக்கம் விழுப்பம், துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும்
2. நாரை நடக்கும் என்று தொடங்கும் புதுக் கவிதை
3. மனுலாகோ என்று தொடங்கும் கபீரின் ஹிந்தி மொழி ஹிந்துஸ்தானி பாடல்
4. அந்தபுறாக்கள் என்று தொடங்கும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பாடல்
5. மேற்கத்திய இசை ( ஒபேரா இசை போன்றது)
6. ஜய ஜய பாரத என்று தொடங்கும் பாரதியின் பாடல்
7. பாடும் பறவைகளே என்ற கே சி எஸ் அருணாசலத்தின் பாடல்.
8. காக்கைச் சிறகினிலே என்று தொடங்கும் பாரதியின் பாடல்
9.வாழைக்கா ஏத்தும் வண்டி என்று தொடங்கும் கிராமியப் பாடல்.

ஸ்ருதிலயா குழுவோடு செர்ந்து பாடிய பாடல்கள்
1. அச்சமில்லை என்று தொடங்கும் பாரதியின் பாடல்
2. செம்பருத்தி பூவின் சிறப்பை மலேசிய, சீன, தமிழ் மொழிகளில் பழைய தமிழ் சினிமா பாடல் மெட்டில்
3. ஆணும் பெண்ணும் என்று தொடங்கும் பாரதியின் பாடல்
4. வானம் ஒன்றுதான் என்று தொடங்கும் உலக அமைதியை வலியுறுத்தும் பாடல்
5. ஒவொரு பூக்களுமே என்று தொடங்கும் சினிமா பாடல்
6. மதுரை மணி ஐய்யரின் மேற்கத்திய இசைக் கோர்வை
7. காற்றினிலே வரும் கீதம் என்று தொடங்கும் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பட பாடல்.

பதின் வயதினர் அதிகமாக இருந்த ஸ்ருதிலயா குழுவினரோடு சேர்ந்து பாடியது பீட் குழுவினருக்கு பெருத்த உற்சாகத்தைத் தந்தது.

Saturday, November 7, 2009

கோலாலம்பூர் கன்வெஷன் சென்டெர் ப்ளீனரி ஹால்

கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டெர் - ப்ளீனரி ஹாலில் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள்

சங்கீத் ஸ்வாகத்

சங்கீத் ஸ்வாகத் - ஸ்ருதிலயா மற்றும் பீட் குழுவினர் சேர்ந்திசைக்கின்றனர்

சங்கீத் ஸ்வாகத் - மலேசிய ஒருமைப்பாடு

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியின் துவக்கமே லய சங்கமத்துடன் துவங்கியது. முதலில் மலேசிய‌ கலைஞர்களின் அணி தப்பட்டை போன்ற லய கருவியை ஒரே சீராகத் தட்டியவாறே அரங்கில் நுழைந்து மேடை ஏறினார்கள். அடுத்து தவில் மற்றும் உருமி மேளத்தை முழங்கியவாறே தமிழ் கலைஞர்களின் அணி வந்து மேடை ஏறினார்கள். அடுத்து சீனக் கலைஞர்கள் மேடையின் பின் புறம் வழியாக முரசு போன்ற தங்களின் கருவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து முழங்கினார்கள். அவர்களின் இரண்டு ட்ராகன்கள் அரங்கத்தின் இருபுற வாயிலின் வழியாக நுழைந்து மேடையின் இரு புற படிக்கட்டுகளின் வழியே மேடை ஏறி வந்து மேளத்திற்கு ஏற்ப ஆடின. கடைசியாக பஞ்சாபி குழுவினரின் பாங்க்ரா குழுவினர் தங்களின் மேளங்களோடு முழங்கியவாறே மேடை ஏறினர். எட்டு நிமிட லய சங்கமத்திற்குப் பிறகு ஒவ்வொரு குழுவாக மேடையிலிருந்து இறங்கிச் சென்றனர். ஒவ்வொரு குழுவும் தஙகளின் கலாச்சார உடையில் வந்து முழங்கியது மலேசிய நாட்டில் உள்ள இனங்களின் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது. இந்த ஒற்றுமையின் சாரத்தை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காண முடிந்தது. இந்த முதல் நிகழ்ச்சியான லய சங்கமத்தை தலைமையெற்று பங்க்ரா மேளத்தை முழங்கிச்சென்ற ட்ரம்மர் சிவம் என்பவர் 'எம்' என்கிற வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர் என்பது ஒரு சிறப்பு.

இந்த முக்கிய கருத்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிலைப்பெற்று இருந்தது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு மேற்கத்திய ட்ரம் வாசித்ததும், மதுரை மணி ஐயரின் மேற்கத்திய இசை குறிப்புகளில் மலேசிய சீன தமிழர் வாழும் பெருமை இந்நாட்டிற்கே என்ற வரிகளை தமிழிலும், மலேசிய மொழியிலும் சேர்த்துப்பாடியதும், மலேசிய தேசிய மலரான செம்பருத்தியை பற்றிய பாடலை மலேசிய, சீன மற்றும் தமிழ் மொழிகளில் பழைய தமிழ் படத்தில் பாடலான‌ மல்லிகை முல்லை ரோஜா என்ற மெட்டில் பாடியதும், எம் எஸ் சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு சீன நடன கலைஞர்களை நடனமாட வைத்ததும், இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கீ போர்டு, ட்ரம்ஸ், சீன இசைக் கருவிகளான குஷெங், ஷெங், சீன புல்லாங்குழல், மலேசிய இசைக் கருவிகளான கோர்ட் மற்றும் ரெபனா ஆகிய கருவிகளையும் சேர்த்து இசைக்க வைத்ததும் இன ஒற்றுமையை இழையாகக் கொண்டதுதான் ஸ‌ங்கீத் ஸ்வாகத் என்பதை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. ஸ்ருதிலயாவிற்கு புல்லாங்குழல் வாசித்தவர் நம்முடைய பீட் சேர்ந்திசைக்குழுவில் இருந்த, திருச்சி பெஃபி டி என் மாநாட்டின் கலை இரவில் புல்லாங்குழல் வாசித்தவருமான இன்ட் பேங்க் ஹவுஸிங்கில் பணிபுரிந்த தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் கடைசி பாடலாக மலேசிய தேசிய பாடல் ஒன்றை பாடியவாறே அனைத்துக் கலைஞர்களும் மலேசியக் கொடியை அசைத்து சாய்ந்தாடி மகிழ்ந்தனர்.

பீட் குழுவின் மலேசியப் பயணம்

ஸ்ருதிலயா இசைப்பள்ளி மற்றும் ஊனமுற்றோரின் தன்னிலைப்பயிற்சி மையத்தின் அழைப்பினை ஏற்று நவம்பர் முதல் தேதி கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் உள்ள ப்ளீனரி அரங்கில் நடை பெற்ற சங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்று வந்துவிட்டோம்.

ஸ்ருதி லயா குழுவும், பீட் குழுவும் இணைந்தும் தனித் தனியாகவும் படல்களைப்பாடினோம். ஸ்ருதிலயா பாடிய அனைத்துப் பாடல்களுக்கும் நடன ஏற்பாடு இருந்த்து. வெவேறு குழுக்கள் நடனமாடின. ஒவ்வொரு பாடல்கள் பற்றியும், நடனநிகழ்வுகள் பற்றியும் தனியே எழுதவுள்ளோம்.

அரங்கம் மிக பிரமாதமாக இருந்தது. ஆசியாவிலேயே மிகப் பெரியது. ஒலி மேம்பாடு சிறப்பாக செய்யப்பட்ட அரங்கு. ஒளி அமைப்பும், ஒளிப் பதிவு அமைப்புகளும் கூட மேம்பட்டவை. ஆகவே எங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடிந்தது. பார்வையாளர்கள் நிறைந்த அரங்கு எங்களின் நிகழ்ச்சியைப் பாராட்டியது.

ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் முதன்முதலாக வெளிநாடு சென்று வெற்றிகரமான சேர்ந்திசை நிகழ்ச்சியினை நடத்தி பாராட்டினைப் பெற்று மகிழ்ச்சியோடு திரும்பி வந்துள்ளோம்.

Wednesday, October 21, 2009

திருக்குறள்

திருக்குறள்: திருவள்ளுவர்
இசை: ராஜராஜேஸ்வரி

ராகம்: ஹம்ஸத்வனி

ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.

ராகம்: தேஷ்

குழல் இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

ராகம்: மாயாமாளவ‌

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

ராகம்: பெஹாக்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ராகம்: சங்கராபரணம்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

ராகம்: கௌரிமனோஹரி / படுதீப்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழொக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

Tuesday, October 20, 2009

அணுவை ஒழிப்போம்.. அமைதி வளர்ப்போம்

இசை: ராஜராஜேஸ்வரி
பாடல்:

வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்
மனித ஜாதியும் ஒன்றுதான்
உள்ளம் ஒன்றுதான் ‍‍உண்மை ஒன்றுதான்
உலக நீதியும் ஒன்றுதான்

ஆவி குடிக்கும் ஆயுதமெல்லாம்
அலை கடலுக்குள் விழவேண்டும்
இன்னொரு யுத்தம் இந்த பூமியில்
இல்லை என்றொரு நிலை வேண்டும்

கொஞ்சும் புறாக்கள் பீரங்கிக்குள்
கூடுகட்ட ஒரு இடம் வேண்டும்
கோடு கிழிக்கும் நாடுகள் எல்லாம்
கொள்கையை நெருங்கி வரவேண்டும்

யுத்தம் எதிர்ப்போம் அன்பை விதைப்போம்
அணுவை ஒழிப்போம் அமைதி வளர்ப்போம்....

Saturday, October 3, 2009

பிராகாரம் நுழைந்தவுடன் ........

பாடல்: ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

ப்ராகாரம் நுழைந்தவுடன் கனியாகிவிடுகிறது ‍ எலுமிச்சை
ப்ராகாரம் நுழைந்தவுடன் தீர்த்தமாகிவிடுகிறது தண்ணீர்
ப்ராகாரம் நுழைந்தவுடன் ப்ரசாதமாகிவிடுகிறது திருநீரும் பொட்டும்
எந்த மாற்றமும் இன்றி வெளியேறுகிறான் பக்தன்

ஐ ஆம் லிவிங்?

பாடல்: தாயம்மாஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி

நாரை நடக்கும் கொளத்தில நண்டு புடிச்சதில்ல‌
முங்கு நீச்சல் போட்டியில மூச்சு திணறியதில்ல‌
கண் பறிச்சு வெல்லமிட்டு கட தேங்கா தின்னதில்ல‌
அடுக்கு பான அரிசி திருடி ஆத்துச் சோறு ஆக்கியதில்ல‌
ஆனாலும் சொல்கிறாய் ஐ ஆம் லிவிங் என்று

அந்த புறாக்கள்........

பாடல்: நெல்லை ஜெயந்தன்ஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி


அந்த புறாக்கள் அஃறிணை
குருத்வாரா ஒரமும் கூட்டமாய் இரை தேடலாம்
சிலுவைகள் மீதமர்ந்தும் சிறகுகள் கோதலாம்
தர்கா வாசலில் தண்ணீர் பருகலாம்
ஊர்வலமாய் தெரு எது வழியும் திரும்பலாம்
எல்லாம் முடிந்து கோபுர உச்சியில் கூட்டில் அடையலாம்
தெரிந்தால் சொல் திணை மாறும் வழி.

Tuesday, September 8, 2009

புதிய பாடல்கள் புதிய இசை அமைப்பு

பீட் சேர்ந்திசைக் குழு தற்போது புதிய பாடல்கள் பலவற்றை கற்று வருகிறது.

மலேசிய நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தவுடனே புதிய பாடல்களைச் சேர்க்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய பாடல்கள் புதிய செய்திகளை சொல்பனவாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பழைய பல்லவி, அனு பல்லவி, சரணம் என்கிற அமைப்பு புதிய செய்திகளைச் சொல்ல ஏதுவாக இல்லை. புதிய செய்திகள் அனைத்தும் புதுக் கவிதைகள் பாணியில்தான் உள்ளன.

பாரதியைப்பற்றி பாரதி தாசன் பாடியுள்ள தமிழகம் தமிழுக்குத்தகும் என்ற கவிதை பழைய பாணி பாடல் கிடையாது. அந்த பாடலுக்கு இசையமைத்துள்ள திரு எம் பி ஸ்ரீனிவாஸன் அவர்கள் இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு ஒரு நடை அடுத்து வரக்கூடிய ஓரிரு வரிகளுக்கு ஒரு நடை என்று பாடல் முழுவதற்கும் பல் வேறு நடைகளில் இசையமைத்து புதுமை புரிந்திருந்தார். அந்த வழிகாட்டலில் ஒரு சில புதுக்கவிதைகளை தேர்ந்து எடுத்து ஏற்கனவே இசையமைத்திருந்தார் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள்.

ஆனால இவை பாரதிதாசனின் கவிதைகளைப்போல் நீண்ட கவிதைகள் அல்ல. ஆனந்த விகடனில் வெளிவந்து பரிசு பெற்ற சிறு சிறு புதுக் கவிதைகள்.

இவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இசையமைத்து குழுவிற்கு பயிற்சி கூட துவங்கினார். திருக்குறளுக்குடக் கூட இசையமைத்து பயிற்சி தந்தார். திருக்குறள் மட்டும் பாண்டிச்சேரியில் நடைப்பெற்ற வங்கி ஊழியர் (பெஃபி டி என்) மாநாட்டில் அரங்கேற்றினோம். ஆனால் புதுக்கவிதைகள் பயிற்சி மட்டும் தொடரப்படாமல் இருந்த்து. தற்ப்போது அது துவங்கப்பட்டு மூன்று புதுக்கவிதைகள் மற்றும் பாரதியின் காக்கைச் சிறகினிலேயும் சென்ற சுதந்திர தினத்தன்று சுதந்திர போராட்ட தியாகி பி ராமமூர்த்தி இல்லத்தில் நடைப்பெற்ற சுதந்திர தின விழாவில் அரங்கேற்றப்பட்டு சேர்ந்திசை முன்னோடி ஆசான் எம்.பி.ஸ்ரீனிவாசனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன.

தற்போது புதியதாக‌ திருமதி ராஜரஜேஸ்வரி அவர்களின் இசையமைப்பில் தயாராகியுள்ள பாடல்கள்:‍

1. அந்த புறாக்கள் அஃறிணை = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
2. ப்ராகாரம் நுழைந்தவுடன் = விகடன் புதுக் கவிதை = மத நல்லிணக்கம்.
3. நாரை நடக்கும் குளத்திலே = விகடன் புதுக் கவிதை = சின்ன சின்ன ஆசைகள்
4. காக்கைச் சிறகினிலே = பாரதியார்
5. ஜெய ஜெய பாரத = பாரதியார்
6. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், குழலினிது யாழினிது, மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ஒழுக்கம் விழுப்பம் தரலான், கற்க கசடற, துப்பார்க்கு துப்பாய, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் ஆகிய திருக்குறள்கள்.

மேலும் இந்த பட்டியல் நீளும். பாடல்கள் அனைத்தும் இசை குறிப்புகளோடு இப்பக்கங்களில் வரும்.

Saturday, September 5, 2009

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வணக்கம்

எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன்.


இசையை கற்றுத் தருவதில், அதிலும் எந்த பிரிவினருக்கும், குழந்தைகள், பெரியவர்கள், இசையைப் பற்றியே சிறிதும் தெரியாதவர்கள், இப்படி யாருக்கு வேண்டுமானாலும் அவரவர்களுக்கு ஏற்றவகையில் ஆர்வத்துடன், கற்பவர்களும் உற்சாகமடைந்து இசையில் ஈடுபாடு கொள்ளுமளவிற்கு திறம்பட கற்றுத்தருவதில் தேர்ந்தவர் எங்கள் ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி சிவராமகிருஷ்ணன் அவர்கள். ஆசிரியர் தினத்தன்று வலைப்பக்கத்தில் அவரைப் பற்றி எழுதுவது எங்களின் கடமை, மகிழ்ச்சியானது மற்றும் சிறப்பானதும் கூட.

ராஜராஜேஸ்வரி அவர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக திருமதி சீதாமணி ஸ்ரீனிவாஸன் அவர்களிடம் மூன்று வருடம் பயின்றது உட்பட‍ பல் வேறு குருக்களிடம் கர்னாடக சங்கீதம் பயின்றவர்.

புகழ் பெற்ற இசை மேதை திரு எம். பி ஸ்ரீனிவாசன் அவர்களின் சென்னை இளைஞர் சேர்ந்திசைக்குழவில் துவங்கிய காலம் தொட்டே உறுப்பினராக இருந்து சேர்ந்திசை பயின்றவர். தற்போது அந்தக் குழுவின் இசை ஆதார நபராக இருக்கின்றார்.

சென்னை பல்கலை கழகத்தில் இசையில் பட்டம் பெற்றவர். மெட்றாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ம்யூஸிக்கில் வெஸ்டர்ன் ம்யூஸிக் பயில்கின்றார்.

வழுவூர் சாம்ராஜ் அவர்களின் குழுவின் நடன நிகழ்ச்சிகளுக்கு பாடல்களை பாடியுள்ளார். 1993‍ல் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கும் பாடியுள்ளார். 1999ல் சிங்கப்பூரில் உள்ள ப்யூபிள்ஸ் தியேட்டரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று ஆர்கெஸ்ட்ரா மற்றும் சேர்ந்திசைக் குழுவினரைப் பயிற்றுவித்துள்ளார்.

தேசிய நாடகப் பள்ளியின் ராமானுஜர் நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார். அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை குழுவிற்கு மேற்கத்திய இசைப் பயிற்சி அளித்துள்ளார்.

1995ல் ஆயனாவிற்காக கர்நாடக இசை அமைத்துள்ளார்.

2001ல் பிரளயனின் சென்னைக் கலைக் குழுவின் உப கதை நாடகத்திற்கு இசை அமைத்துள்ளார்.

75 பாடகர்கள் மற்றும் 10 இசைக் கருவிகளையும் கொண்ட குழுவிற்கு சில அற்புதமான பழைய கீதங்களையும் ஸ்வரஜதிகளையும் கற்றுத்தந்து அரங்கேற்றியுள்ளார்.

இத்தனை திறமை படைத்த ஆசிரியை எங்களின் பயிற்சியாளராகவும், இசை நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் இருந்து குழுவின் செயல்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் ஆதார ஸ்ருதியாக இருக்கின்றார். ஆசிரியர் தினமான இன்று அவருக்கு எங்களின் வணக்கங்களை உரித்தாக்குகின்றோம்.

Thursday, August 13, 2009

கோலாலம்பூரில் BEAT சேர்ந்திசை நிகழ்ச்சி


மலேசியாவில் உள்ள Independent Living & Training centre சார்பில் Bank Employees Art Troupe (BEAT) - இன் சேர்ந்திசை நிகழ்ச்சியும், ஸ்ருதி லயாவின் இசை நிகழ்ச்சியும் வரும் நவம்பர் மாதம் முதல் தேதியன்று கோலாலம்பூர் convention centre அரங்கில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான மாதிரி நிதி ரசீது மேலே தரப்பட்டுள்ளது.

Saturday, May 30, 2009

சேர்ந்திசை பயிற்சி

இசை ஆசிரியை திருமதி ராஜராஜேஸ்வரி இசை குறிப்புகளை பீட் சேர்ந்திசை குழுவினருக்கு சொல்லித்தருகிறார் .

சேர்ந்திசை ஒத்திகை

மலேசியா - ஸ்ருதிலயா நிகழ்ச்சிக்காக சென்னையில், BANK EMPLOYEES FEDERATION OF INDIA - நரேஷ் பால் மையத்தில் நடைபெறும் பீட் குழுவின் சேர்ந்திசை ஒத்திகை.

Sunday, May 3, 2009

சேர்ந்திசை ஒத்திகைகோலாலம்பூர் ஸ்ருதிலயா நிகழ்ச்சிக்காக சென்னை கேரள சமாஜத்தில் நடைபெறும் சேர்ந்திசை ஒத்திகை

Friday, May 1, 2009

பிரம்ம தேவன் கலையிங்கு நீரே

பாடல்:பாரதியார் இசை: எம். பி. சீனிவாசன்
சுருதி : 6 1/2

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்
பிரம்ம தேவன் கலையிங்கு நீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ
தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ
தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

உண்ண காய்கனி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணை பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லடை செய்வீரே
விண்ணின்றெமை வானவர் காப்பார்
மேவிப்பார்மிசை காப்பவர் நீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

பாட்டும் சேய்யுளும் கோத்திடுவீரே
பரத நாட்டிய கூத்திடுவீரே

தந்தனதானோ தந்தனா தந்தனதானோ
தந்தனதந்தனனோ

காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு
உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே
நாட்டிலே அறம் கூட்டிவைப்பீரே
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே
தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

Sunday, April 26, 2009

விடுதலைப் போரினில்.....

பாடல் : ம ணவாளன் இசை : எம் பி ஸ்ரீனிவாசன்

சுருதி : 1

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே
தோழா ...... தோழா....
வீரர் உமக்கே வணக்கம் வணக்கம்
தோழா.... தோழா.... (விடுதலை)

காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில்
தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்
போரிடும் எமக்கு புத்துயிர் தாரீர்
தோழா.... தோழா.... (விடுதலை)

இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்
இதயக் கனவுகள் ஈடேறும் சத்யம்
தோழா.... தோழா.... (விடுதலை)

ஆயிரம் ஆயிரம் தோழர்கள் ரத்தம்
குடித்தெழுந்தே நிற்கும் கோரச் சமூகம்
தகர்த்தெறிவோம் மக்கள் சக்தியினாலே
தோழா.... தோழா.... (விடுதலை)

நமது குறிக்கோள்கள்

குறிக்கோள்கள்

1) அணுயுத்தப் பேரழிவிலிருந்து உலகைக் காத்தல், உலக சமாதான சக்திகளுடன் இணைந்து நிற்றல்.

2) அனைத்து நாடுகளது சுதந்திரத்தையும் மதித்தல், நிற வெறி மத‌வெறி, இன வெறி, பிற்போக்கு சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டஙகளை ஆதரித்தல்.

3) இந்தியாவின் சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் பேணிக் காத்தல், மதம் இனம் மொழி ஜாதியின் பெயரால் வெறித்தனங்களை கிளப்பிவிடும் தீய சக்திகளை எதிர்த்தல், நாட்டு ஒற்றுமைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக பாடுபடுதல்.

4) தேசிய மொழிகள் அனைத்திற்கும் சம அந்தஸ்து, ம த சார்பற்ற அரசு கோட்பாடு, சாதீய ஒடுக்குமுறைகள் ஒழிப்பு ஆகியவற்றுக்காக போராடுதல்.

5) பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை எனும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் விடாது காத்து நிற்றல்.

6) உழைக்கும் மக்களது வாழ்க்கைப் போராட்டஙகளுக்கு துணை நிற்றல்.

7) காம வெறியூட்டும் ஆபாச கலை ‍ இலக்கியங்களை எதிர்த்தல்.

8) லஞ்சம், ஊழல், கடத்தல், கலப்படம், கள்ளச்சந்தை, கறுப்பணம் போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்தல்.

9) பெண்ணினத்தை இழிவுபடுத்தும் எல்லாவிதமான பிற்போக்குத்தனங்களையும் சாடுதல்; மாதர் விடுதலைக்காகப் பாடுபடுதல்.

10) மூட நம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடும் வகையில் விஞ்ஞான கண்ணோட்டத்தை வளர்த்தல்.

இத்தகைய நோக்கங்களுடன் கலை இலக்கியப் பணிகளில் ஈடுபடுவோம் என்று அறிவிப்பதுடன், மனித குலம் பெற்றுள்ள எல்லா அறிவுத் துறைகளும் எவ்வாறு மனிதகுல மேம்பாட்டுக்காகவே பயன் பட வேண்டும் என்று கூறுகிறோமோ அவ்வாறே கலை இலக்கியமும் மக்களது முன்னேற்றத்திற்காக பயன் பட வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.