Thursday, November 19, 2009

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் நடனங்கள்

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியில் சுருதிலயா குழுவினர் பாடும்போது பின்னணித்திரையில் பாடலின் பொருளை விளக்கும் படக் காட்ச்சிகளும், முகப்பு மேடையில் நடன நிகழ்வும் எற்பாடாகியிருந்தது. பீட் குழுவினர் பாடும்போது க்ளோஸ் சர்க்யூட் டிவியில் பாடகர்கள் பின்னணித்திரையில் காட்டப்பட்டார்கள்.

நடன நிகழ்வுகள் அனைத்தும் பாராட்டும் வகையில் இருந்தன. ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையத்தினர் ஆடிய சக்கர நாற்காலி நடனம் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது. அவர்களை பாராட்டும் வகையில் மேடையில் அவர்களின் சக்கர நாற்காலி அணிவகுப்பு நடைபெற்றபோது இரண்டு இசைக்குழுவினரும் இணைந்து ஆடோகிராக்ஃப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியது அன்றைய தினத்தின் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வாக இருந்தது.

பாரதியின் காணி நிலம் வேண்டும் பாடலுக்கு மலேசிய கிராமிய உடையில் விவாசியகள் பாடுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டது உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அழகுற சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் இரண்டாவது சரணத்தின் போது பாரதி காட்சியில் நுழைந்தபோது, மிகையல்ல மயிர்க்கால்கள் கூச்சமுற்றன. அதிலும் பாரதி பராசக்தியிடம் விவசாயிகளைக் காட்டி காணி நிலம் வேண்டும் என்று சுழண்டாடி கேட்ட போது மீண்டும் புல்லரித்து. இந்த நடன நிகழ்வை மேடைக்கு முன்புறம் இருந்து பார்க்காமல் போனோமே என்று வருந்தினேன்.

பாடகர்களின் வரிசையில் இருக்கும்போது இரு குழுவினரும் பாடும் பாடல்களுக்கு நடைபெறும் நடன நிகழ்வுகளை முழுமையாகப் பார்க்கமுடியாது. நடத்துனரின் சமிக்ஞைகளை கவனமாக பார்க்கவேண்டியிருக்கும். அப்படியும் ஒரு பகுதி நடனம் நம் பார்வைப்பகுதியில் வரும்போது நடனத்தைப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான ஒரு பாடல் எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா படப்பாடலான காற்றினிலே வரும் கீதம். இந்தப் பாடலுக்கு சீன நடனக்குழுவினர் ஆடிய நடனம் ஆஹா என்று வாயாரப் பாராட்டும் வகையில் இருந்த்தது. இளமை எழிலோடு, நளின வளைவோடு, காதல் பாவத்தோடு, திகைப்பூட்டும் அடவுகளோடு, முற்றிலும் புதிய பாங்கோடு ஆடிய நடனம் இனொரு முறை பார்க்கவேண்டும் என்பதாக இருந்தது. பெண்கள் களி நடனமாடிக் கொண்டிருக்கும்போது அங்கு தன் இணையைத்தேடி வரும் ஆண்கள் நடனமாடியவாறே அவர்களை நெருங்க முயலும்போது அவர்களின் கையில் சிக்காமல் ஒர் இழையில் தப்பித்துக் கொண்டு ஒடும் பெண்கள் தங்களின் நகர்வுகளை ஆண்கள் கணிக்க முடியாமல் திணறும் வகையில் ஒரு நடன பாணி அமைக்கப் பட்டிருந்தது. நம்முடைய கிராமங்களில் கோழிகள் பிடிக்க முடியாத வகையில் திசையும், கோணமும் மாற்றி மாற்றி ஒடும் போக்கை பார்த்து நடன பாணியை உருவாக்கியிருப்பார்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது.

மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலியாக அவருடைய காதலியை அவர் பிரிய நேர்ந்தபோது அவளுக்காக அவர் எழுதி இசையமைத்த யூ வேர் நாட் அலோன் என்று தொடங்கும் பாடலைப் பாடினர். அந்த பாடலுக்கு அரங்கத்தினரிடமிருந்து எழுந்த ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது. மைகேல் ஜாக்ஸன் பற்றிய க்ளிப்பிங்க்ஸ் பின் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. பாதி பாடல் பாடிக்கொண்டிருந்தபோது மைகேல் ஜாக்ஸன் போன்ற தோற்றத்தில் ஒரு நடனக்கலைஞர் மேடையில் தோன்றி சில வினாடிகள் மைகேல் ஜாக்ஸனைப் போலவே நடனமாடிவிட்டு சென்றார். அப்படி ஒரு சில நொடிகள் மட்டுமே வந்து சென்றாலும் அனைவரின் உள்ளத்தையும் கவ்விச் சென்றார்.

இரண்டு மூன்று பாடல்களுக்கு நடனமாடிய பவானி கணேசமூர்த்தியின் பரதாஞ்சலி குழுவினர் ஆடிய நடனம் பண்பட்ட வகையில் இருந்தது. குழுவினரிடையே காணப்பட்ட தொடர்பாற்றல் தெளிவாக வெளிப்பட்டது.

ராதாகிருக்ஷ்ணன் பரதஞ்சலி குழுவினர், க்ஷர்மிலி ஃபைனார்ட்ஸ் குழுவினரும் தங்களின் நடனங்களில் மிளிர்ந்தனர்.

No comments:

Post a Comment