Saturday, November 28, 2009

பீட் குழுவின் மலேசிய பயணம் மாபெரும் வெற்றி

-Bank Workers Unity December 2009 இதழில் சி பி கிருஷ்ணன்

மலேசிய தலை நகர் கோலாலம்பூரிலிருந்து 2600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் முக்கிய நகரமான் சென்னையில் உள்ள வங்கி ஊழியர் கலைக்குழுவான பீட் மலேசியாவில் உள்ள ஊனமுற்றோருக்கு உதவுவதற்காக் நிதி திரட்ட பெரும் பங்காற்றியது என்றால் அது வங்கி ஊழியருக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே பெருமை வாய்ந்த நிகழ்வாகும்.

கோலாலம்பூர் ஸ்ருதிலயா கலைக்குழு தொடங்கப்பட்டு வெள்ளி விழா கொண்டாடும் வகையிலும், ஊனமுற்றோரின் தன்னிலைப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பத்தாண்டு நிறைவுறுவதை ஒட்டியும் 2009 நவம்பர் முதல் தேதி இரவு 8.30 மணிக்கு மிகச் சிறப்பான கலை நிகழ்ச்சி துவங்கியது.

ஸ்ருதிலயாவும் பீட்டும் இணைந்து குழுமியிருந்த மூவாயிரம் பொதுமக்களை மூன்று மணி நேரம் தங்கள் இசைத்திறமையால் வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்றனர் என்பதே உண்மை.

ஒரு புறம் ஸ்ருதிலயாவில் 15 வயதிலிருந்து 25 வயது வரையிலான இளம் பெண்களும் ஆண்களும் கொண்ட துடிப்பு மிக்க இளம் பாடகர்கள் சேர்ந்திசையின் மூலம் பாரதியார் பாடல்கள், அதில் வெளிப்பட்ட கம்பீரம், அச்சமின்மை, காதல் ரசம், பக்தி ரசம், மைகேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலி, மலேசியாவின் தேசிய மலருக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய கொடிக்கும் உரிய முக்கியத்துவத்தையும், மதிப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் கர்நாடக, மேற்கத்திய, மெல்லிசை மூலமாக மிகச்சிறந்த இசையை வெளிப்படுத்தினர்.

அதற்கு டிரம்ஸ், தபேலா, கீ போர்டு வாசித்த கலைஞர்களும் வீணை ( டாக்டர் காயத்திரி ஆறுமுகம்) புல்லாங்குழல் (ஸ்ரீதர்) சீன புல்லாங்குழல், ஷெங், குஷெங் கலைஞர்களும் ஒத்திசைவாக பெரும் பங்காற்றினர். ஸ்ருதி லயாவின் முதல்வர் திருமதி ராஜலக்ஷ்மி அவர்களின் ஒரு வருட கடும் பயிற்சியும், உழைப்பும் பளிச்சென வெளிப்பட்டது.

வங்கி ஊழியர் கலைகுழுவின் ஆரம்பமே அசத்தலாக அமைந்தது. உலகப்பொதுமறை என்று எல்லோராலும் போற்றப்படும் நூற்றுக் கணக்கான மொழியில் மொழிபெயர்ப்பான திருக்குறள், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய 'அந்தபுறாக்கள்' பாடல், கிராமத்து மக்களிடையே உள்ள வாழ்க்கை போராட்டத்தையும், ஊடலையும் வெளிப்படுத்தும் 'வாழ்க்காய் ஏற்றும் வண்டி' நாட்டுப்பற்றையும், சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் 'ஜெய ஜெய பாரத' பாடல் இப்படி தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் வழங்கப்பட்ட பாடல்களை தாளம் போட்டு ரசித்தனர் மலேசிய ரசிகர்கள்.

மலேசிய நாட்டில் மலேய மக்கள் பெரும்பான்மையாக (சுமார் 60%) உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களோடு சீனர்களும் (சுமார் 30%) இந்தியர்கள் (சுமார் 10%) நல்லிணக்கத்துடன், சுதந்திரமாக அவரவர்களின் வழிபாட்டு உரிமைகளோடு வாழ்கின்றனர். மலேசிய மக்களின் ரசிப்பினை வெளிப்படுதின விதமும், பாராட்டும் கலைஞர்களை மிகுந்த அளவில் உற்சாகப்படுத்தியது, ஒரு நிலையில் பீட் என்ற பெயரை தொகுப்பாளர் உச்சரிக்கும்போதே ரசிகர்களிடையே மிகுந்த கரவொலி எழுந்தது.

ஒட்டு மொத்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக, வணிக நோக்கத்துடன் சினிமா கலைஞர்கள் வழ்ங்கும் பிரம்மாண்டத்தினைவிட பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அதற்கு பக்க பலமாக நிகழ்ச்சி தொகுப்பாளரின் குரல் வளமும், தொகுப்புரையும், ஐந்து நாட்டியக் குழுவைச்சேர்ந்த கலைஞர்கள் ‍ அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் பாட்டிற்கு ஏற்றவாறு பாவத்துடன் ஆடிய நாட்டியமும், ஒலி ஒளி அமைப்பும், நிகழ்ச்சியின் துவக்கத்தில் மலேசியக் கலைஞர்களின் தப்பு வாசிப்பும், தமிழ் கலைஞர்களின் தவில் மற்றும் உருமியும், பஞ்சாபி கலைஞர்களின் டோலக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒலியை துல்லியமாக வெளிப்படுத்தும் பிரம்மாணடமான அரங்கமும் அமைந்தன.

No comments:

Post a Comment